×
Saravana Stores

கரூர் மாவட்டம் திருக்காடுதுறை மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா

வேலாயுதம்பாளையம், மே 1: கரூர் மாவட்டம் திருக்காடுதுறை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடந்த 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியும், கம்பம் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாரியம்மன் கோவில் தீ குண்டம் இறங்கும் திருவிழா முன்னிட்டு கடந்த 22ம் தேதி திங்கட்கிழமை முதல் முதல் 27ம் தேதி சனிக்கிழமை வரை தினமும் மாரியம்மனுக்கு இரவு சிறப்பு அபிஷேக அலங்காரமும், பூஜைகளும் நடைபெற்று வந்தது. கடந்த 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு வடிசோறு நிகழ்ச்சியும் . 29ம் தேதி திங்கட்கிழமை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி மேள தாளங்கள் முழங்க தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அன்று இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

நேற்று 30ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் தீ குண்டத்தில் இறங்கும் ஆண் மற்றும் பெண் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து ஆண் மற்றும் பெண் பக்தர்கள் தயாராக இருந்த தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக மாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் ,மஞ்சள், திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம் ,விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு வகையான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .பின்னர் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மன் முன் படையல் போட்டு பொங்கல் பூஜையும் ,அதனைத் தொடர்ந்து பெண்கள் மாவிளக்குகளை ஊர்வலமாக கொண்டு வந்து மாவிளக்கு பூஜையும் செய்தனர். இரவு வாண வேடிக்கை நடைபெற்றது. இன்று புதன்கிழமை அதிகாலை 5 மணி அளவில் மாரியம்மன் கோவிலில் கம்பம் பிடுங்கி காவிரி ஆற்றில் விடும் நிகழ்ச்சியும் , காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும்,அதனை தொடர்ந்து மாலை அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் ,மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருவிழா குழுவினர் செய்திருந்தனர்.

The post கரூர் மாவட்டம் திருக்காடுதுறை மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா appeared first on Dinakaran.

Tags : Karur District Thirukkaduthurai Mariyamman Temple Pookuzhi Festival ,Velayuthampalayam ,Karur District Tirukkaduthurai Mariyamman Temple ,Mariyamman Temple Fire Gundam Festival ,Karur District Thirukkaduthurai Mariyamman Temple Pukkuzhi Festival ,Dinakaran ,
× RELATED தீபாவளியை முன்னிட்டு புகழூர் நகர...