பெரம்பூர்: பெரம்பூர் தில்லைநாயகம் பிள்ளை 2வது தெருவை சேர்ந்தவர் அப்புன்ராஜ். இவரது மகன் வேம்பு விஷ்வா (18), பெரம்பூரில் உள்ள ஐடிஐயில், எலக்ட்ரிக்கல் பிரிவில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் நண்பரின் இருசக்கர வாகனத்தை வாங்கிக்கொண்டு பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, விநாயகபுரம் பகுதியில் இருந்து காயிதே மில்லத் கல்லூரி வரை செல்லும் மாநகர பேருந்து (தடம் எண்.29) எதிர் திசையில் வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து, வேம்பு விஷ்வா பைக் மீது நேருக்குநேர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான போலீசார், பலியான வேம்பு விஷ்வாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து, பேருந்தை ஓட்டி வந்த மாதவரத்தை சேர்ந்த டிரைவர் சுரேஷை (52) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் ஐடிஐ மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு சம்பவம்: அனகாபுத்தூர், அம்மன் கோயில் தெருவை சேர்ந்த கொத்தனார் ராம்பாபு (32), நேற்று முன்தினம் இரவு பைக்கில் ேகாவிலம்பாக்கம் மேடவாக்கம் மெயின் ரோட்டில் சென்றபோது, பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் திருவாரூர் மாவட்டம், வில்லியனூர் கொடவாசல் தாலுகா, குடியன் தெருவை சேர்ந்த பிரசன்னாவை (21) கைது செய்தனர்.
The post மாநகர பேருந்து மோதி ஐடிஐ மாணவன் பலி appeared first on Dinakaran.