திருவண்ணாமலை, மே 1: திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 104 டிகிரி வெயில் சுட்டெரித்தது. கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள பொது இடங்களில் உப்புசர்க்கரை உப்பு சர்க்கரை கரைசல்(ஓஆர்எஸ்) வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், வரலாறு காணாத கோடை வெயில் சுட்டெரிக்கிறது. அதிகபட்சமாக நேற்றும் 104 டிகிரி வெயில் பதிவானது. மேலும், பகலில் சாலைகளில் நடந்து செல்ல முடியாதபடி வெப்பக்காற்று வீசியது. அதனால், பொதுமக்கள் பெரிதும் தவித்தனர்.
இந்நிலையில், சுட்டெரிக்கும் கோடை வெயிலில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். அவசியமின்றி வெயில் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தொப்பி, குடை போன்றவை கொண்டுசெல்ல வேண்டும். தேவையான அளவு குடிநீர் அருந்த வேண்டும். சூடானாவற்றை தவிர்த்து, இளநீர், மோர் போன்றவற்றை அருந்த வேண்டும். உடலில் நீர் இழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, முதியவர்கள், உடல் நலிவுற்றோர், கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள் வெயிலில் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், கோடை காலத்தில் ஏற்படும் நீர் இழப்பு, சில நேரங்களில் உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் உயிரிழப்புக்கும் காரணமாக அமைவதுண்டு. எனவே, நீர் சத்து குறைவதை தவிர்க்க உப்பு சர்க்கரை கரைசல் (ஓஆர்எஸ்) அருந்துவது அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதையொட்டி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் அலுவலர்களுக்கு சுகாதார துறை சார்பில் உப்பு சர்க்கரை கரைசல்(ஓஆர்எஸ்) வழங்கப்பட்டது. அதேபோல், பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள பஸ் நிலையம், மருத்துவமனைகள், கோயில் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் உப்பு சர்க்கரை கரைசல் வழங்கவும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும், அண்ணாமலையார் கோயிலில் நேற்று தரிசனம் செய்த பக்தர்களுக்கு, கோயில் நிர்வாகத்தின் சார்பில் குளிர்ந்த மோர் வழங்கப்பட்டது. மேலும், கூடுதலான இடங்களில் குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு, அம்மணி அம்மன் கோபுரம் அருகே உள்ள முதலுதவி சிகிசசை மையத்தில், கோயில் நடைதிறந்து, நடை அடைக்கும் வரை மருத்துவர்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
The post நீரிழப்பால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் வழங்க ஏற்பாடு திருவண்ணாமலையில் சுட்டெரிக்கும் கோடை வெயில் appeared first on Dinakaran.