×

2 கட்ட ஓட்டுப்பதிவு சதவீதத்தை வெளியிடாமல் தேர்தல் கமிஷன் தாமதிப்பது ஏன்? எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி

புதுடெல்லி; மக்களவை தேர்தலில் முதல் 2 கட்ட ஓட்டுப்பதிவு சதவீதத்தை வெளியிடாமல் தேர்தல் கமிஷன் தாமதம் செய்வது ஏன் என்று எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளன. நாடு முழுவதும் ஏப். 19 மற்றும் ஏப்.26ம் தேதி 2 கட்ட மக்களவை தேர்தல் முடிந்து விட்டது. மே 7ல் 3ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் முதல் இரண்டு கட்டங்களுக்கான இறுதி ஓட்டுப்பதிவு எண்ணிக்கையை தேர்தல் கமிஷன் இன்னும் வெளியிடவில்லை.

இதை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது குறித்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளன. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தொடர்பான அனைத்து தரவுகளையும் சரியான நேரத்தில் வெளிப்படைத்தன்மையுடன் வெளியிட வேண்டியது அவசியம். புள்ளிவிவரங்களுடன் அவற்றைப் பகிரங்கப்படுத்த வேண்டும்.

முதன்முறையாக, முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்து 11 நாட்களும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்து 4 நாட்களும் ஆகியும் இறுதி வாக்காளர் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. கடந்த காலங்களில் தேர்தல் ஆணையம் இறுதி வாக்களிப்பை வெளியிடும் வழக்கம் இருந்தது. ஆனால் தேர்தல் ஆணைய இணையதளத்தில் தோராயமான தகவல்கள் தான் கிடைக்கின்றன. அதே போல் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும், அந்த மக்களவைத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிகளிலும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையும் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இல்லை.

ஒரு மாநிலத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் ஒவ்வொரு சாவடியிலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையை மட்டுமே இணையதளம் காட்டுகிறது’ என்று குற்றம் சாட்டினார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓ பிரையன் கூறுகையில்,’ பிரதமர் மோடி தனக்கு தேவையானவரை நியமிக்கவும், தேர்தல் ஆணையத்தை அழிக்கவும் நாடாளுமன்றத்தில் சட்டத்தை மாற்றினார். இப்போது, ​​​​இரண்டு கட்டங்களுக்குப் பிறகு, தேர்தல் ஆணையம் இன்னும் இறுதி வாக்குப்பதிவு தரவை வெளியிடவில்லை.

இதில் ஏன் தாமதம்? முதல் இரண்டு கட்டங்களும் சரியாக நடக்கவில்லையா. ஒவ்வொரு கட்டத்திற்குப் பிறகும் ஏன் பத்திரிகையாளர் சந்திப்பு இல்லை’ என்று கேள்வி எழுப்பினார். மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ‘இது மிகவும் கவலையளிக்கிறது. தேர்தல் முடிவுகளைக் கையாளுவதில் தீவிர அச்சத்தை எழுப்புகிறது.

முதல் இரண்டு கட்டங்களின் இறுதி வாக்குப்பதிவு புள்ளிவிவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. தோராயமான வாக்குப்பதிவு சதவீதங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை கூட தேர்தல் ஆணைய இணையதளத்தில் இல்லை. அறிவிக்கப்பட்ட சதவீதங்கள் அர்த்தமற்றவையாகவும், தவறானவையாகவும் உள்ளன’ என்றார்.

* கேள்வி கேட்டதும் விழித்தெழுந்தது தேர்தல் ஆணையம்
எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டதும் தேர்தல் ஆணையம் விழித்தெழுந்து நேற்று இரவு முதல் 2 கட்ட வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட்டுள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு 66.14 சதவீதம், 2ஆம் கட்ட வாக்குப்பதிவு 66.71 சதவீதம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஏப்.19ம் தேதி நடந்த முதல் கட்டத்தில், 66.22 சதவீத ஆண்களும், 66.07 பெண் வாக்காளர்களும் வாக்களிக்க வந்துள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட மூன்றாம் பாலின வாக்காளர்களின் வாக்குப்பதிவு 31.32 சதவீதமாக இருந்தது. ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் ஆண்களின் வாக்குகள் 66.99 சதவீதமாகவும், பெண்களின் வாக்குகள் 66.42 சதவீதமாகவும் பதிவாகியுள்ளன. மூன்றாம் பாலினத்தில் 23.86 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

The post 2 கட்ட ஓட்டுப்பதிவு சதவீதத்தை வெளியிடாமல் தேர்தல் கமிஷன் தாமதிப்பது ஏன்? எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Election Commission ,New Delhi ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED டீப்ஃபேக் வீடியோ விவகாரத்தில்...