திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே குடும்ப தகராறில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, கொலையை மறைத்து இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்த பாதிரியாரை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள குணாபா பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகளான வைஷாலி (33) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கிறிஸ்துவ பாதிரியாரான விமல்ராஜ் (35) என்பவருக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இருவரும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அருகே கேளம்பாக்கத்தை அடுத்துள்ள பொன்மார் பகுதியில் உள்ள மலைத்தெருவில் குடியேறினர். விமல்ராஜின் பெற்றோர் மேடவாக்கத்தை அடுத்துள்ள ஒட்டியம்பாக்கம் பகுதியில் வசித்து வருகின்றனர்.
விமல்ராஜ் பொன்மார் பகுதியில் அட்வென்ட் கிறிஸ்துவ சபையின் துணை பாதிரியாராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஒட்டியம்பாக்கத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்த விமல்ராஜ், தனது மனைவி வைஷாலி உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டதாகவும், மருத்துவமனைக்கு காரில் அழைத்து செல்லும்போது உயிரிழந்து விட்டதாகவும், அவரது சடலத்தை வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டதாகவும் கூறினார். இதனை நம்பிய அவரது பெற்றோர், சடலத்தை வீட்டில் வைத்து வைஷாலியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
மும்பையில் இருந்து நேற்று முன்தினம் மாலை ஒட்டியம்பாக்கத்திற்கு வந்த வைசாலியின் பெற்றோர் மற்றும் சகோதரர் விஷால்குமார் ஆகியோர், வைஷாலியின் கழுத்தில் காயம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தாழம்பூர் போலீசார் அங்கு சென்று நடத்திய விசாரணையில், தனது மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல காரில் ஏற்றியபோது காயம் ஏற்பட்டதாகவும், வழியிலேயே அவர் இறந்து விட்டதால் சடலத்தை வீட்டுக்கு கொண்டு வந்து விட்டதாகவும் பாதிரியார் விமல்ராஜ் தெரிவித்தார். ஆனால் அவரது தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததால், போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அதில், கணவன் மனையின் இடையே திருமணம் ஆனதிலிருந்து தொடர்ச்சியாக தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், கடந்த ஞாயிற்றுக்கிழமையும் தகராறு ஏற்பட்டபோது, ஆத்திரத்தில் அவரை அடித்து கீழே தள்ளி கழுத்தில் காலை வைத்து நெரித்து கொலை செய்ததாகவும், கொலையை மறைத்து உடல் நலக்குறைவால் இறந்து விட்டதாக கூறி பாதிரியார் நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், வைஷாலியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலையை பாதிரியார் விமல்ராஜ் மட்டுமே செய்தாரா அல்லது அவருக்கு யாரேனும் உடந்தையாக இருந்தார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம் appeared first on Dinakaran.