- திருவள்ளூர்
- விநாயகர்
- கீசச்சேரி மேட்டுமாநகர்
- மப்பேடு காவல் நிலையம்
- கடம்பத்தூர் ஒன்றியம்
- திருவள்ளூர் மாவட்டம்
- கீசச்சேரி…
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே நடந்த காவலாளி கொலையில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழச்சேரி மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கீழச்சேரி கிராமத்தைச் சேர்ந்த செவ்வேல் என்பவர் இந்த கோயிலை கட்டி வருகிறார். இந்நிலையில் கட்டுமான பணிக்கான செங்கல்லை பாதுகாப்பதற்காக கோயிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த 26, 27 ஆகிய தேதிகளில் வேலை பார்த்து வந்துள்ளார்.
28ம் தேதி காலை கோயில் அருகே காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் செல்வம் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். தற்போது சென்னை செனாய் நகரில் உள்ள செவ்வேலின் வீட்டில் 7 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சென்னையில் இருந்து வந்து மேட்டுமாநகர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்தார்.
இந்நிலையில் செவ்வேல் கோயில் கட்டும் பணி தொடங்கியதையடுத்து காவலாளியாக மீண்டும் வேலைக்கௌ செல்வத்தை சேர்த்துள்ளனர். செவ்வேலுக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலம் மேட்டுமாநகர் பகுதியில் உள்ளது. அதனை அதே பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி என்பவரது மகன் கோவிந்தசாமி (60) என்பவர் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் மேட்டுமாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த செல்வத்தை இரவு காவலாளியாக வேலைக்கு வைத்த ஆத்திரத்தில் கோவிந்தசாமி ஏற்பாட்டில் செல்வம் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கீழச்சேரி அருந்ததிபுரத்தைச் சேர்ந்த சீனிவாசனின் மகன் சரவணன் (56), மாசிலாமணியின் மகன் கோவிந்தசாமி (60) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post திருவள்ளூர் அருகே நடந்த காவலாளி கொலையில் 2 பேர் கைது: வேலைக்கு சேர்த்த ஆத்திரத்தில் தீர்த்துக்கட்டினர் appeared first on Dinakaran.