நாகை: நாகை மீனவரை இலங்கை கடற்கொள்ளையர் கட்டையால் தாக்கி விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி சிங்காரவேலர் நகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் எண்முருகன்(48). இவர் கடந்த 28ம் தேதி காலை செருதூர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தனது பைபர் படகில் மீன் பிடிப்பதற்காக சென்றார். கோடியக்கரைக்கு தென்கிழக்கில் 5 நாட்டிக்கல் மைல் தொலைவில் நேற்று மாலை 6 மணியளவில் மீன் பிடித்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ஒரு பைபர் படகில் 3 இலங்கை கடற்கொள்ளையர்கள் வந்தனர். அவர்கள் எண்முருகனின் பைபர் படகை சுற்றி வளைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்து எண்முருகன் செய்வதறியாது நின்றார். அப்போது பைபர் படகில் ஏறி எண்முருகனிடம் எதற்காக இங்கு மீன் பிடித்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டு மிரட்டினர். மேலும் தாங்கள் வைத்திருந்த கட்டையால் 3 பேரும் சரமாரியாக தாக்கினர். இதையடுத்து தாங்கள் வந்த பைபர் படகில் கடற்கொள்ளையர்கள் 3 பேரும் தப்பினர்.
கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் தலை, கைகளில் காயமடைந்த எண்முருகன், தனது பைபர் படகில் இன்று அதிகாலை 4 மணிக்கு செருதூருக்கு வந்து நடந்த சம்பவத்தை ஊர் பஞ்சாயத்தாரிடம் கூறினார். இதையடுத்து சிகிச்சைக்காக எண்முருகன், நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அளித்த புகாரின்பேரில் வேளாங்கண்ணி கடலோர காவல்படை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post நாகை மீனவரை தாக்கி விரட்டியடிப்பு: இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம் appeared first on Dinakaran.