×
Saravana Stores

செயல்கள் தடுமாறுவதற்கு காரணங்கள் இதுதான்

ராமாயணக் கதையையையும் அதில் வரும் சம்பவங்களையும் நாம் பல கோணங்களில் புரிந்து கொள்ள வேண்டும். முதல் கோணம், பகவான் மகாவிஷ்ணு  ராமச்சந்திரனாக அவதாரம் செய்தார். அவருடைய கதை ராமாயணம். அதிலே வருகின்ற சம்பவங்களை இன்றைய வாழ்வியலோடு நாம் தொடர்புபடுத்தி, “அது சரியா, இது சரியா?” என்று விமர்சிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்ற கோணத்தில், அந்த காவியத்தை அணுகுவது ஒருவகை. இன்னொரு கோணம் உண்டு.

என்னதான் தெய்வம் தொடர்புடைய கதையாக ராமாயணம் இருந்தாலும், அதிலே வருகின்ற பாத்திரங்கள், அவர்கள் மனநிலைகள், அந்த மனநிலையின் வெளிப்பாடாக நடக்கக்கூடிய சம்பவங்கள், அந்தச் சம்பவங்களின் விளைவுகள் என்பதையும் சிந்தித்துப் பார்த்து, அதிலிருந்து சில உண்மைகளைப் புரிந்து கொண்டு, நம்முடைய ஆன்மிக மற்றும் லௌகீக வாழ்க்கையிலும் பொருத்திப் பார்த்து, சில பிரச்னைகளுக்குத்தீர்வு காணமுடியும் என்று ஆழமாக
ஆராய்வது ஒருவகை.

இப்பொழுது தசரதனை எடுத்துக் கொள்வோம். அவன் ஒரு சக்கரவர்த்தி. மகாவீரன். அவன் மக்களை நல்லபடியாக ஆண்டான். வெகு காலம் பிள்ளை இல்லாத அவனுக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தன. அந்த நான்கு பிள்ளைகளில் அவன் மிக அதிகமாகப் பிரியம் வைத்தது மூத்த மகனான ராமனிடம்தான். (இதிலும் ராமன் தெய்வம் என்பதற்காக அல்ல; இயல்பான, லௌகீக ரீதியான பிரியம்தான்)
அதைப்போலவே மூன்று மனைவிகள் இருந்தாலும், பட்ட மகிஷி கௌசலையைவிட அதிகப் பிரியம் வைத்திருந்தது கைகேயியிடம்தான். முதல் மனைவியின் குழந்தையின் மீதும், மூன்றாவது மனைவியின் மீதும், அவன் உலகியல் ரீதியான பிரியத்தை வைத்திருந்தான். அதனால்தான் அவன் மிக இயல்பாகச் செய்ய வேண்டிய ஒரு காரியத்தை அவசரப்பட்டுச் செய்து, மிகப் பெரிய சிக்கலை உண்டாக்கிவிட்டான்.

தான் மிகவும் பிரியம் கொண்டிருந்த கைகேயியின் பிள்ளையான பரதன், மாமன் வீட்டுக்குச் சென்றிருக்கும் வேளையில், மிக மிக அவசரமாக அவன் ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதற்குப்பல காரணங்கள் இருந்தாலும், இரண்டு காரணங்கள் முக்கியமானவை.
1. தன் வாழ்நாள் குறித்த அச்சம், அதற்கு தகுந்தபடி அவனுக்குத்தோன்றிய கனவுகளும் சகுனங்களும்.
2. பரதன் மூலம் ஏதேனும் இடையூறு வருமோ என்ற அச்சம். இதை வால்மீகி ராமாயணம் விரிவாகப் பேசுகிறது.
இவை இரண்டும் மகாவீரனான அவனுடைய மனதில் அச்சத்தின் வெளிப்பாடுதான். இதை ராமனிடமே தசரதன் கூறுகிறார்.

“இந்த பட்டாபிஷேக நிகழ்ச்சி சரியாக சிக்கலின்றி நடக்குமோ என அஞ்சுகிறேன். என் உயிருக்கும் ஆபத்து இருப்பதை உணர்கிறேன். என் ஜென்ம நட்சத்திரத்தை ராகு, சூரியன், செவ்வாய் முதலிய கிரகங்கள் ஆக்ரமித்து இருப்பதால், உயிர் கஷ்டம் வரும் என்று ஜோதிடர்கள் சொல்கிறார்கள். அதற்குள் இந்த ராஜ்ஜியத்தை உனக்கு தந்துவிட நினைக்கிறேன். மனிதர்களின் புத்தி ஒரே மாதிரியாக இருக்காது. என் மனம் மாறுவதற்குள் உனக்கு பட்டாபிஷேகம் செய்துவிட வேண்டும். பரதன் வெளியூர் போயிருக்கிறான். அவன் நல்லவன்தான். இந்திரியங்கள் ஜெயித்தவன்தான். தயை உள்ளவன். ஆனால், அவன் அம்மான் வீட்டுக்குப் போய் வெகுநாட்களாகிறது. சாதுக்களாக இருந்தாலும், தர்ம சிந்தனை உள்ளவர்களாக இருந்தாலும், பிறரால் கலைக்க முடியாதவர்களாக இருந்தாலும், சமயத்தில் மனம் மாறிவிடும்.” இவ்வளவும் தசரதன் கூற்றுகள்.

ஆக, ஏதோ ஒரு வகையில், தான் திட்டமிட்ட காரியம் நடைபெறாது என்பது அவன் உள்ளுணர்வுக்குத் தெரிந்திருந்தது. ஒருவனுக்கு வாழ்க்கையைப் பற்றிய அச்சமும், மரணத்தைப் பற்றி அச்சமும் வந்துவிட்டால், அவனுடைய செயல்கள் தடுமாற்றத்தைத் தரும். வீரனாக, அனுபவம் மிக்கவராக இருந்தாலும், குழப்பமே மிஞ்சும். அவனால் மிகத் துல்லியமாக முடிவுகளை எடுக்க முடியாது என்பதற்குச்சிறந்த உதாரணம் தசரதன். அவன் மிகச் சிறந்த நிர்வாகியாகவும், தனக்கு அந்தரங்க ஆலோசனை கூறக்கூடிய நுட்பமான மந்திரிகளையும், ஆலோசகர்களையும் வைத்திருந்தாலும்கூட, தசரதனின் மனநிலையை மட்டும் புரிந்து கொண்டு அவர்கள் ஆலோசனை கூறினார்களே தவிர, அவன் தீர்மானத்தில் இருந்த சில சிக்கல்களை எடுத்துரைக்கவில்லை.

ராமருடைய பட்டாபிஷேகத்தை விரும்பிய அவர்கள், ராமன் மீது கொண்டிருந்த ஒப்பற்ற பிரியத்தாலும், “தசரதன் மகா சக்கரவர்த்தி, அவனை எதிர்த்து பேசுவது சரியல்ல” என்கிற இயல்பான விஸ்வாசத்தினாலும் அவர்கள் தசரதன் சொன்னதை ஏற்றுக் கொண்டார்கள்.

ஏன் வசிஷ்டரோ மற்றவர்களோ, ‘‘அரசே, ராமருக்கு பட்டாபிஷேகம் செய்வது இருக்கட்டும். நீங்கள் பரதனுக்கு முதலில் செய்தி சொல்லி அனுப்புங்கள். நான்கு பிள்ளைகளும் ஊரில் இருக்கும் போது இந்த பட்டாபிஷேகத்தைச் செய்யலாம். விரைந்து பரதனை அழைத்து வாருங்கள். எங்கே போய் விடப்போகிறது ராமனுடைய பட்டாபிஷேகம்?’’ என்று ஒருஆலோசனை சொல்லி இருந்திருக்கலாம்.

ஆனால், அப்படிச் சொல்லவில்லை அவர்கள். அந்த ஆலோசனையைச் சொல்லி, தசரதன் அதனை ஏற்றுக் கொண்டு, பரதனுக்கு செய்தி அனுப்பி, அவனை வரவழைத்த பிறகு, ராமனுக்குப் பட்டாபிஷேக நாளை குறித்து இருந்தால், ராமாயணக் கதையே மாறிப் போயிருக்கும். ஆனால், ராவணனின் கதை முடிந்துபோய் இருக்காது. அதனால் தேவர்களின் துன்பமும் நீங்கி இருக்காது.

நம்முடைய வாழ்விலும்கூட இப்படி நடக்கும். சில புத்திசாலிகள்கூட சில நேரங்களில் எதிர்விளைவுகளைக் கருதாமல் (consequences) அவசர முடிவு எடுப்பார்கள். ஏதோ ஒரு காரணத்தினால் அங்கே அறிவைவிட உணர்ச்சி அதிகப்படியாக வேலை செய்யும். சில சூட்சும விதிகளை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. தசரதனின் மதி செயல்படாததற்குக் காரணம் ராவணனுடைய விதிதான். சில செயல்கள் பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்தமான நன்மையை உத்தேசித்தே நடைபெறுகின்றன.

The post செயல்கள் தடுமாறுவதற்கு காரணங்கள் இதுதான் appeared first on Dinakaran.

Tags : Ramayana ,Lord Maha Vishnu , ,Ramachandra ,
× RELATED மகான்களுக்கு ஏன் துன்பம் வருகிறது?