புதுடெல்லி: மாஜி பிரதமர் தேவகவுடா பேரன் மீதான பாலியல் சீண்டல் புகார்கள் குறித்து பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகாவில் தேவகவுடா தலைமையிலான ஜேடிஎஸ் கட்சியுடன் பாஜ கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறது. தேவுகவுடாவின் பேரனும் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா உதவி கேட்டு வந்த பல பெண்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ள வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரஜ்வலை கைது செய்ய கோரி பல்வேறு மகளிர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் பெரும் பிரச்னையானதையடுத்து பிரஜ்வல் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டார். வீட்டு வேலை செய்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தேவகவுடாவின் மகன் ரேவண்ணா மீதும் காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று டிவிட்டரில் பதிவிடுகையில், 10 நாட்களுக்கு முன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆதரவாக கர்நாடகாவில் பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். அப்போது பிரஜ்வலின் தோளில் கை வைத்தபடி மோடி போஸ் கொடுத்தார். ஆனால் இன்று அவர் நாட்டில் இருந்தே தலைமறைவாகி உள்ளார். பெண்களுக்கு அவர் இழைத்துள்ள பாலியல் கொடுமைகள் அதிர வைக்கிறது. இதில் ஏராளமான பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது. ஆனால் பிரதமர் மோடி தனது வழக்கமான பாணியில் மவுனம் காத்து வருகிறார் என குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு தலைவர் பவன் கேரா பதிவிடுகையில்,பிரஜ்வலின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் ஏராளமான ஆபாச படங்கள் இருந்துள்ளன. இப்படிப்பட்ட தலைவரை கொண்டுள்ள ஒரு கட்சியுடன் பாஜ எதற்காக கூட்டணி வைத்துள்ளது.பிரஜ்வல் ஜெர்மனிக்கு தப்பி செல்ல உதவியது யார்? இதில், பிரதமர் ஏன் மவுனமாக உள்ளார் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
The post தேவகவுடா பேரன் மீதான பாலியல் புகாரில் பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன்? பிரியங்கா காந்தி கேள்வி appeared first on Dinakaran.