ஆவடி: நோயாளி போல் வந்து கணவன், மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில், வடமாநில வாலிபரை கைது செய்த போலீசார், தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவடி அடுத்து காந்தி ரோடு 2வது தெருவில் வசித்தவர் சிவன் நாயர்(60). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர், வீட்டிலே மருத்துவம் பார்த்து வந்தார். இவரது மனைவி பிரசன்னகுமாரி(55) மத்திய அரசு பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களது மகன் தனியார் மருத்துவ கல்லூரியில் பேராசிரியராகவும் அதே பகுதியில் சித்த மருத்துவம் பார்த்து வருகிறார்.
மேலும் இவர்களது மகள் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சிவன் நாயரும், பிரசன்னா குமாரியும், நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது, மர்மமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதாக முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், ஆவடி முத்தாபுதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கணவன் மனைவி உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இரட்டை கொலை நடந்த வீட்டில், ஆவடி துணை ஆணையர் ஐமன் ஜமால், தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதேபோல், இரவு ரோந்து பணியில் இருந்த செங்குன்றம் துணை ஆணையர் பாலகிருஷ்ணனும், சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால் மர்ம நபர்கள் குறித்த எந்த காட்சிகளும் கிடைக்கவில்லை.
கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட டாகி என்ற மோப்ப நாயை வரவழைத்து, சம்பவம் நடந்த இடத்தில் இருந்து காந்தி ரோடு வழியாக, ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடி, வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்டார சாலை தீபாஞ்சி அம்மன் கோவில் வரை சென்று, அப்பகுதியை சுற்றிவந்து மீண்டும் வந்த வழியாக திரும்பியது.
இந்நிலையில், கொலை நடந்த வீட்டில், போலீசாரிடம் மொபைல் போன் ஒன்று சிக்கியது.
அதை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், சம்பவத்தை பற்றிய இறந்தவர்களுடைய மகனான சித்த மருத்தவர் ஹரி ஓம் ஸ்ரீரீ கொடுத்த தகவல் அடிப்படையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகேஷ்(20) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மகேஷ் என்பவர் 2019 ஆண்டு முத்தாபுதுப்பேட்டையில் உள்ள ஹார்டு வேர்ஸ்சில், வேலை செய்தபோது சித்த மருத்துவர் சிவன் நாயரிடம் சிகிச்சை பெற்றுள்ளார்.
மேலும் சிவன் நாயரிடம் நெருக்கம் ஏற்படுத்தி கொண்டு அடிக்கடி அவரது வீட்டிற்குள் வந்து சென்றுள்ளார். மகிஷிடம் சிவன் நாயருக்கு கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், மகேஷின் நடவடிக்கை சரியில்லாததால் சிவன் நாயரின் மனைவி பிரசன்னா தேவி கண்டித்துள்ளார். இதனை பற்றி அவரது மகன் ஹரி ஓம் ஸ்ரீயிடமும் பல முறை கூறியுள்ளார். சம்பவ நாளான நேற்று முன்தினம் மகேஷ் சித்த மருத்துவர் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது பிரசன்னா தேவியிடம் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி ஆத்திரத்தில் மகேஷ் பிரசன்னா தேவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். அதனை தடுக்க வந்த சிவன் நாயரையும் கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்தது. மேலும் அவரை கைது செய்யும்போது அவரை விசாரணை செய்யும்போது அவர் அணிந்திருந்த ஆடைகளின் மீது படிந்திருந்த ரத்த கறை மற்றும் கொலை செய்யும்போது அவர் பயன்படுத்திய கத்தியால் மகேஷ் கையில் ஏற்பட்ட காயம் மற்றும் அவருடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் மகேஷ்தான் தம்பதியை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
The post தம்பதிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் வடமாநில வாலிபர் கைது appeared first on Dinakaran.