×
Saravana Stores

கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: சென்னையில் 2.96 லட்சம் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் கையிருப்பில் உள்ளதாகவும், பேருந்து நிலையம், பூங்காக்கள் உள்ளிட்ட 158 இடங்களில் குடிநீருடன் ஓஆர்எஸ் கரைசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி நீக்கும் ஊசி செலுத்தும் மாபெரும் இலவச முகாமை அடையாறு மண்டலம், வார்டு-180, திருவான்மியூர், திருவள்ளுவர் நகர் கடற்கரையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், நேற்று தெரு நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி நீக்கும் ஊசி செலுத்தி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, வார்டு-180, திருவான்மியூர், திருவள்ளுவர் நகர் கடற்கரையில் கோடை வெப்பத்தின் தாக்கத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தல் மற்றும் ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்கும் பணியை ஆய்வு செய்தார். பின்னர், திருவள்ளுவர் நகர் பேருந்து நிலையம் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்கும் பணியையும் பார்வையிட்டார்.

இதுகுறித்து, நிருபர்களுக்கு ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: தென் மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின் அடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் குடிநீர் விநியோகம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சென்னை மாநகராட்சியின் சார்பில் பொது இடங்களில் ஏற்கனவே 188 இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கும் கோடை வெயிலின் போது என்னென்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் வெயிலில் வேலை செய்யும் பணியாளர்கள் தலையை துணி/துண்டு/தொப்பி கொண்டு மூடி பணிபுரியலாம். குழந்தைகளை நேரடி வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் வெளியில் விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் அடிக்கடி குடிக்க வேண்டும். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 140 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், 16 நகர்ப்புற சமூக நல மையங்கள், 3 மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் தொற்றுநோய் மருத்துவமனைகளிலும் வெயிலினால் வரும் நோய்களுக்கான மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்க தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 2.96 லட்சம் ஓ.ஆர்.எஸ். கரைசல் பாக்கெட்டுகள் கையிருப்பில் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் குடிநீருடன் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெயிலில் செல்லும் போது உடலில் நீர்ச்சத்து குறைந்து தலைவலி, தலைசுற்றல் மற்றும் டிஹைடிரேசன் ஏற்படுவதால் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் மற்றும் பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் தற்போது 158 இடங்களில் மருத்துவப் பணியாளர்கள் மேற்பார்வையில் குடிநீருடன் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலக கால்நடை தினத்தினை முன்னிட்டு, கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் வராமல் தடுத்திடும் வகையில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகள் மற்றும் தெருக்களில் மாடுகளை விடுவதை மாடுகளின் உரிமையாளர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதுவரை சாலைகளில் சுற்றித்திரிந்த 1,204 மாடுகள் பிடிக்கப்பட்டு மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, மீண்டும் விடக்கூடிய கட்டாயம் உள்ளது. மாடுகளின் உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மாநகராட்சியின் சார்பில் பிடிக்கப்படும் தெருநாய்களில் கருத்தடை செய்யப்படாத நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு, பிடிக்கப்படும் அனைத்து தெருநாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டு பிடிக்கப்படும் இடத்தில் மீண்டும் விடப்படுகிறது இவ்வாறு தெரிவித்தார்.

* தாம்பரம் மாநகராட்சியில் எந்தெந்த பகுதிகளில்…
தாம்பரம்: அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள குடிநீர் வசதிகள் செய்வது குறித்து தாம்பரம் மாநகராட்சி ஆணையர் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அலுவலர்களுடன் ஆய்வு செய்தார். அப்போது, அவர் கூறியதாவது: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் கோடை வெப்பத்தின் தாக்கத்தை முன்னிட்டு, மாநகராட்சியின் சார்பில் 40 இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் 23 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கப்படுகிறது. இந்த பணிகளை அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனகாபுத்தூர், பம்மல் ஆகிய பகுதிகளில் குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகள், வெடிப்புகள் மற்றும் மின்மோட்டாரில் ஏற்படும் பழுதுகள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீர் தொய்வின்றி கிடைக்கவும் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

தாம்பரம் மாநகராட்சியில் கோடை காலத்தில் சீரான குடிநீர் விநியோகம் வழங்கப்படுவதை தினசரி உறுதி செய்திடும் வகையில், குடிநீர் தேவைகள் நிறைவேற்றிடும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் திருநீர்மலை, பம்மல் மற்றும் அனகாபுத்தூர் பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் மூலம் மூன்று தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கோடைகாலமான தற்போதும் தடையின்றி குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

வெயிலின் தாக்கம் குறித்து கோடை வெயிலில் செய்யக் கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மாநகராட்சி பகுதிகளில் கடைகள் வாடிக்கையாளர்களுக்கு குடிநீர் வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும், விழிப்புணர்வில் மாநகராட்சி தெரிவித்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள், திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்ட தூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

The post கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Tags : ORS ,Chennai ,Corporation Commissioner ,Radhakrishnan ,Dinakaran ,
× RELATED திடக்கழிவுகள் அகற்றுவதில்...