பெரம்பூர்: சென்னை வில்லிவாக்கம் ராஜா தெருவை சேர்ந்தவர் சரத்குமார் (28), தனியார் வங்கியில் கலெக்சன் ஏஜென்டாக வேலை செய்து வருகிறார். திருமணமாகவில்லை. கொலை வழக்கு உள்ளிட்ட சில வழக்குகள் சரத்குமார் மீது உள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் 1.30 மணியளவில் வில்லிவாக்கம் மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 7 பேர் கும்பல் சரத்தை வழிமறித்து தடுத்து நிறுத்தியது. இதில் சுதாரித்துக் கொண்ட சரத் அங்கிருந்து தப்பி ஓடிய போது அந்த கும்பல் விடாது துரத்தி சென்று சரத்தை ஓடஓட பட்டாக்கத்தியால் தலை, முகம், மார்பு ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு தங்களது இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றது. இதை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு சிதறி ஓடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து அங்கு வந்த ராஜமங்கலம் போலீசார் சரதை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சரத் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்திற்கு கொளத்தூர் துணை கமிஷனர் பாண்டியராஜன், உதவி கமிஷனர் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து 2 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சரத்தின் கூட்டாளியான சர்போஜி என்பவருக்கு கொலை கும்பலை சேர்ந்தவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் வாத்தியாரை கொலை செய்து விட்டோம், அடுத்து நீ தான் என்றும், உயிர் மீது ஆசை இருந்தால் இந்த ஊரை விட்டு ஓடி விடு எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இன்ஸ்டா மூலமாக மிரட்டல்களையும் விடுத்து வந்ததும் தெரிய வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் திருமணமான பெண் ஒருவரை சரத்தின் நண்பரான ஜோசப் அழைத்து சென்றதாகவும், சர்போஜியும், சரத்தும் ஜோசப்பிற்கு ஆதரவாக இருந்ததால், திருமணமான பெண்ணின் உறவினர்கள் யாராவது சரத்தை கொலை செய்தனரா அல்லது கடந்த 2019ம் ஆண்டு பெரவள்ளூர் பகுதியில் பூசாரி ஜானகிராமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சரத்குமார் முக்கிய குற்றவாளி என்பதால் முன்விரோதம் காரணமாக சரத்குமார் கொலை செய்யப்பட்டாரா என்பது உள்பட கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியில் நடந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post ராஜமங்கலத்தில் பயங்கரம் பட்டப்பகலில் ஓடஓட விரட்டி ரவுடி சரமாரி வெட்டி கொலை appeared first on Dinakaran.