* 2 பைக், வெடி மருந்துகள் பறிமுதல்
கூடுவாஞ்சேரி: அமமுக கவுன்சிலர் வீட்டில் நாட்டுவெடிகுண்டு வீசிய விவகாரத்தில் ஊரைவிட்டு ஊரு வந்து, எங்க ஏரியாவில் கெத்து காட்டியதால் பயமுறுத்துவதற்காக இந்த சம்பவத்தை செய்தோம் என்று கைதான 3 வாலிபர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். சென்னை வண்டலூர் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட கொளப்பாக்கம், மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (62). அமமுக கட்சியை சேர்ந்த இவர் 12வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.
முத்துப்பாண்டி நெடுங்குன்றத்தில் இருந்து கொளப்பாக்கம் செல்லும் மெயின் ரோட்டில் உள்ள தனது வீட்டிலேயே நெல்லை தேவர் மெஸ் என்ற பெயரில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியளவில் கொளப்பாக்கத்தில் இருந்து நெடுங்குன்றம் நோக்கி 2 பைக்குகளில் வந்த மர்ம கும்பல் முத்துப்பாண்டி வீட்டின் வீடு மீது 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் 2 வெடிகுண்டுகளும் வீட்டின் தடுப்பு கம்பியில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீஸ் உதவி கமிஷனர் ஜெயராஜ், ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வானமாமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். மேலும் தாம்பரத்தில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வெடித்து சிதறிய வெடிகுண்டுகளின் துகல்களை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஓட்டேரி போலீசார் 3 வாலிபர்களை நேற்று முன்தினம் இரவு பிடித்து அவர்களிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கொளப்பாக்கம், அண்ணா நகர், அம்பேத்கர் தெருவை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரின் மகன் அன்பழகன் (22), ஏரிக்கரை தெருவைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் ஜீவா (20) மற்றும் 17 வயது பள்ளி சிறுவன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர்.
முன்னதாக கைதான 3 வாலிபர்களும் போலீசாரிடம் கூறுகையில், முத்துப்பாண்டிக்கும் எங்களுக்கும் எந்த ஒரு முன் விரோதமும் இல்லை. அவரது மகன் அழகுபாண்டியன் என்பவர் தேவர் ஜெயந்தி விழாவின்போது 10க்கும் மேற்பட்ட கார்களில் அவரது ஊர்களில் இருந்து 100க்கும் மேற்பட்டோரை வரவைத்து நாங்கள் குடியிருக்கும் பகுதியிலேயே பெயர் பலகை வைத்தும், கொடிகளை கட்டிக்கொண்டும் உலா வந்து கெத்து காட்டினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் ஒன்று சேர்ந்து முதலில் அழகுபாண்டியனை மிரட்டி பார்ப்போம், அதற்கு அவர் அடங்காவிட்டால் அவரை தீர்த்துக் கட்டலாம் என்று முடிவு எடுத்தோம். பின்னர் பெருமாட்டுநல்லூரில் உள்ள பட்டாசு கடைக்குச் சென்று நாட்டு வெடிகள் மற்றும் மருந்துகளை வாங்கி வந்து 4 நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்தோம். இதில் ஒரு நாட்டு வெடிகுண்டை சுபாஷ்சந்திரபோஸ் தெருவில் வெடிக்க வைத்து சோதனை செய்து பார்த்தோம். அது வெற்றிகரமாக முடிந்தது.
இதனையடுத்து அழகுபாண்டியனை மிரட்டுவதற்காக அவரது வீட்டின் மீது 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டுச் சென்றோம். மேலும் ஒரு நாட்டு வெடிகுண்டை பிரபல ரவுடியான நெடுங்குன்றம் சூர்யா வீட்டின் அருகே சாலையோரத்தில் வீசிவிட்டுச் சென்றோம் என்றனர். மேலும் இச்சம்பவத்துக்கு அவர்கள் மூவரும் பயன்படுத்திய 2 பைக்குகள், வெடி மருந்துகள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
The post அமமுக கவுன்சிலர் வீட்டில் நாட்டுவெடிகுண்டு வீச்சு ஏரியாவில் கெத்து காட்டியதால் பயமுறுத்துவதற்காக செய்தோம்: கைதான 3 வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.