ஜங்கிப்பூர்: மக்களவை தேர்தலை முன்னிறுத்தி பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படுகிறது என்றும் இந்த சட்டம் இந்துக்களுக்கு எந்த பலனையும் தராது என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். முர்ஷிதாபாத் மாவட்டம், ஜங்கிப்பூர் தொகுதியில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில்,‘‘தேர்தலின் முதல் 2 கட்டங்களில் பாஜவுக்கு தோல்வி தான் கிடைக்கும் என கூறப்பட்டு வருவதால் அந்த கட்சி மக்களை பிரித்து ஆளும் உத்தியை கையில் எடுத்துள்ளது. தேர்தல் வந்தால் மத உணர்வுகளை தூண்டும் விதத்தில் ஏதாவது பிரச்னையை அந்த கட்சி கையிலெடுப்பது வழக்கம்.
இந்த முறை ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து பொது சிவில் சட்டம் பற்றி அந்த கட்சி பேசி வருகிறது. தனது தேர்தல் லாபங்களுக்காக பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவோம் என பாஜ பேசுகிறது. இந்த சட்டத்தால் இந்துக்களுக்கு எந்த பலனும் இல்லை. முதலில் நடந்த 2 கட்ட தேர்தலில் வாக்குபதிவு சதவீதத்தை பார்க்கும் போது தேர்தலில் பாஜ தோல்வியை தழுவும் என உறுதியோடு சொல்லலாம். மீதி உள்ள 5 கட்ட தேர்தலிலும் அவர்களுக்கு தோல்வி தான் கிடைக்கும். இதனால் பாஜ தலைவர்களுக்கு அச்சமும் பீதியும் ஏற்பட்டுள்ளது. தேர்தலில் பாஜ படுதோல்வி அடைவதற்கு இன்னும் சில நாள்களே உள்ளன’’ என்றார்.
The post பொது சிவில் சட்டம் இந்துக்களுக்கு எந்த பலனும் தராது: மம்தா பானர்ஜி ஆவேசம் appeared first on Dinakaran.