புதுடெல்லி: அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கட்சி தலைவர் கார்கேவுக்கு வழங்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி, ரேபரேலி தொகுதிகள் காந்தி குடும்பத்தினரின் கோட்டையாக கருதப்படுகிறது. ரேபரேலி தொகுதியில் இதுவரை போட்டியிட்ட சோனியா காந்தி இம்முறை மாநிலங்களவை மூலம் எம்பியாகி உள்ளார். இதனால் அத்தொகுதியில் பிரியங்கா காந்தி இம்முறை போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல கேரளாவின் வயநாட்டில் போட்டியிடும் ராகுல் காந்தி, மீண்டும் அமேதி தொகுதியிலும் களமிறங்க வேண்டுமென உபி காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்த காங்கிரஸ் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் நேற்று அளித்த பேட்டியில், ‘‘அமேதி, ரேபரேலி வேட்பாளர்களை தேர்வு செய்ய கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அதிகாரம் வழங்குவதாக மத்திய தேர்தல் கமிட்டியில் முடிவு செய்யப்பட்டது. எனவே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதும் அறிவிக்கப்படுவார்கள்’’ என்றார்.
The post அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் யார்?.. கார்கே முடிவெடுக்க அதிகாரம்; காங்கிரஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.