நன்றி குங்குமம் தோழி
பவளப்பாறைகளை ஓவியங்களாக வரைந்து அது குறித்து விழிப்புணர்வு கொடுத்து வருகிறார் உமா மணி. தன் ஓவியங்களை பார்க்கும் போது பவளப்பாறைகளை நேரடியாக காண்பது போல இருக்க வேண்டும் என நினைத்தவர், தன் 49 வயதில் ஸ்கூபா டைவிங் கற்றுக் கொண்டு ஆழ்கடலுக்கு சென்று, தான் பார்த்த பவளப்பாறைகள் அனைத்தையும் ஓவியங்களாக வரைந்து வருகிறார். ஓவியர், ஸ்கூபா டைவர் என பன்முகங்கள் கொண்ட இவரின் சாகசங்கள் மற்றும் ஓவியங்கள், ‘கோரல் வுமன்’ என்னும் பெயரில் ஆவணப்படமாக வெளியாகியுள்ளது. கொடைக்கானலில் மகனுடன் சேர்ந்து இயற்கை விவசாயம் செய்துவரும் உமாவிடம் பேசினோம்.
‘‘நான் பிறந்து வளர்ந்தது சென்னையில். பி.ஏ ஆங்கிலம் இலக்கியம் முடிச்ச பிறகு சில காலம் தனியார் பள்ளியில் வேலை பார்த்தேன். திருமணத்திற்குப் பிறகு கணவருக்கு மாலத்தீவில் மருத்துவராக பணியாற்ற வாய்ப்பு வந்ததால் 2004-ம் வருஷம் அங்கு போயிட்டோம். என் மகன் வளர்ந்ததும், அவன் வேலையை அவனே பார்த்துக் கொள்ள ஆரம்பித்ததும், எனக்கு நிறைய நேரம் கிடைச்சது. அந்த நேரத்தை நான் உபயோகமா செய்ய நினைச்சேன். சிறிய அளவில் ஓவியங்கள் வரையத் தொடங்கினேன். பிரெஞ்ச் வகுப்புகள், யோகா வகுப்புகள் என பலவிதமாக என் நேரத்தை செலவழித்தேன். நான் பிரெஞ்சு மொழி கற்கும் இடத்தில் நான் ஓவியம் வரைவதைப் பற்றி அறிந்த ஆசிரியர்கள், என்னை மேலும் ஊக்குவித்தார்கள்.
முதலில் ழுதுபோக்குக்காகத்தான் பேப்பரில் ஓவியங்களை வரைந்தேன். அதைப் பார்த்த என் கணவர் (அவரும் ஓவியர்) எனக்கு கேன்வாசில் வரைய சொல்லிக்கொடுத்தார். சில கால பயிற்சிக்குப் பின் நானும் தொழில்முறை ஓவியர் போல வரைய கற்றுக்கொண்டேன். அப்போது ஒரே விஷயம் சார்ந்து ஓவியங்கள் வரைந்து கண்காட்சியில் வைக்க சொன்னார்கள். ரோஜாக்களை வரைந்து அதனை கண்காட்சியில் வைத்தேன். அங்கு வந்த பிரெஞ்ச் பெண்மணி ஒருவர் பவளப்பாறைகள் குறித்து அவர் எடுத்த ஆவணப்படத்தை திரையிட்டார். அதைப் பார்த்த பிறகு எனக்கு பவளப்பாறைகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என ஆர்வம் வந்தது.
மாலத்தீவில் பவளப்பாறைகளை பார்க்காமல் விட்டு விட்டோமே என நினைத்தேன். அதன் பிறகு நான் அதிகமாக பவளப்பாறைகளை வரையத் தொடங்கினேன். நான் வரைந்த பவளப்பாறைகளை கொண்டு ஓவியக் கண்காட்சி ஒன்றை நடத்தினேன். அதன் பிறகு தொடர்ச்சியாக பவளப்பாறைகள் குறித்துதான் ஓவியக் கண்காட்சிகளை நடத்தினேன்.
அதனை காண வந்த ஒருவர் ‘நேரில் பார்க்காமல் நீங்கள் வரைவது யதார்த்தமாக இல்லை’ எனச் சொல்லவும், நான் பவளப்பாறைகளை பார்த்து வரைய வேண்டும் என முடிவு செய்தேன்’’ என்றவர், 49 வயதில் தன் ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க வேண்டும் என கடலுக்குள் செல்ல முடிவு செய்தார். மாலத்தீவுகளில் கரையை ஒட்டிய பகுதியில் உள்ள பவளப்பாறைகள் வீட்டிலிருந்தபடியே தெரியும். ஆனால், மேலும் பாறைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானால் ஆழ்கடலுக்குள் செல்லவேண்டும்.
அதற்கு ஸ்கூபா டைவிங் தெரியணும். அதற்கான பயிற்சி எடுத்தேன். முதலில் எனக்கு நீச்சல் தெரியாது. கடல் மற்றும் நீச்சல் குளங்களில் நீந்துவதற்கு நிறைய வித்தியாசங்கள் உள்ளது. கடலில் நீர் கனமாக இருக்கும். அலை இருப்பதால் நீச்சல் செய்ய கடினமாக இருக்கும். அதனால் முதலில் நீச்சல் கற்றுக்கொண்டு அதன் பிறகு ஸ்கூபா டைவிங் கற்றுக்கொண்டேன் ஆரம்பத்தில் பயமாக இருந்தது ஆனாலும் பவளப்பாறைகளை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டேன். டைவிங் பயிற்சியில் 5 அடியில் ஆரம்பித்து 10 அடி வரை பயிற்சி தருவார்கள். அதன் பிறகுதான் ஆழ்கடலுக்குள் அழைத்துச் செல்வார்கள்.
என்னதான் நான் பயிற்சி எடுத்தாலும் கடலில் குதிக்க சொன்ன போது பயமாக இருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு குதித்து, கடலுக்குள் 60 அடி ஆழத்திற்கு சென்றேன். டைவிங்கின் போது நம் முதுகில் 40 கிலோ ஆக்சிஜன் சிலிண்டர் மட்டுமில்லாமல் டைவிங் சூட் அணிய வேண்டும். இது தவிர நாம் நீரின் மேல் வந்துவிடாமல் இருப்பதற்காக 4 கிலோ எடை கொண்ட இரும்பு நங்கூரமும் இருக்கும். இதுதான் நம்மை அந்த ஆழத்திலிருந்து மேலே வராமல் தடுக்கும் ஒரே கருவி. மேலும் நம்முடைய கையில் ஒரு கைக்கடிகாரத்தை கட்டி விடுவார்கள். அதில் நாம் எந்த திசையில் செல்கிறோம் என்றும், சிலிண்டரில் உள்ள ஆக்சிஜன் அளவு எல்லாம் அதன் மூலம் கணிக்கலாம். இப்படித்தான் நான் ஸ்கூபா டைவிங்கான பயிற்சி எடுத்து சான்றிதழும் பெற்றேன்’’ என்றவர் பவளப்பாறைகள் குறித்து பேசத் தொடங்கினார்.
‘‘மீன்களின் வீடுகள்தான் இந்த பவளப்பாறைகள். சின்னச் சின்ன மீன்களை சாப்பிட பெரிய மீன்கள் வந்தால், அவை எல்லாம் இந்த பாறைக்குள் சென்று ஒளிந்து கொள்ளும். மீன்கள் முட்டை போடுவதும், குஞ்சுகளை வளர்த்தெடுப்பதும் இந்தப் பாறைகளில்தான். இந்த பாறைகள் அழிந்தால் மீன்களும் அழிந்திடும். இந்த பவளப்பாறைக்கும் உயிர் உண்டு. ஒரு விலங்கினம் மற்றும் செடிகள் சேர்ந்த கலவைகள்தான் இந்த பவளப்பாறைகள். அதன் மேல் பகுதி வளரும் தன்மை கொண்டது.
அதாவது, ஒரு வருடத்திற்கு ஒரு இஞ்ச் அளவுதான் இவை வளரும். இதன் கீழ்ப்பகுதியில் கால்சியம் கார்பனேட் என்னும் சுண்ணாம்பு படிந்திருக்கும். இவை இறுகி ஆழ்கடலுக்குள் ஒரு சுவர் போல் மாறி, கடல் அரிப்புகளை தடுக்கும். 2004ல் சுனாமி வந்தபோது மாலத்தீவில் ஒரு தீவு மட்டுமே அதிகமாக பாதிக்கப்பட்டன. மற்ற தீவுகள் எல்லாம் இந்தப் பாறைகளால் காப்பாற்றப்பட்டன. இவை ‘கடல்களின் மழைக்காடுகள்’ என அழைக்கப்படுகின்றன.
25 விதமான கடல் வாழ் உயிரினங்கள் இந்தப் பாறைகளில்தான் வாழ்ந்து வருகிறது. கடலின் ஆழத்திற்கேற்ப பவளப்பாறைகள் வளரும். கடலின் 5 அடி ஆழத்தில் ஒருவிதமான பவளப்பாறையும் ஆழம் செல்ல செல்ல வேறு வேறு பவளப்பாறைகளை பார்க்க முடியும். அவற்றைக் கொண்டே நாம் எத்தனை அடி ஆழத்தில் இருக்கிறோம் என்று தெரிந்து கொள்ளலாம். இப்படிப்பட்ட பவளப்பாறைகள்தான் சமீப காலமாக அழிந்து வருகின்றன. அதுதான் வேதனைக்குரிய விஷயம்.
தற்போது அதிகரிக்கும் வெப்பநிலைக் காரணமாகவும் இவை அழிவின் விளிம்பில் உள்ளன. நம்முடைய பூமியில் வெப்பநிலை உயர உயர பவளப்பாறைகள் அழிந்து கொண்டு வருகிறது. அதோடு ரசாயனக் கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகளும் கடலில் நிறைந்து கிடக்கின்றன. பெரும்பாலான குப்ைபகளை நீர்நிலைகளில்தான் போடுகிறார்கள். விளைவு அவை கடலில் கலக்கிறது.
ஒரு முறை நான் டைவிங் செய்த போது, கடலில் ஆமை ஒன்று பிளாஸ்டிக் குப்பையை உணவு என நினைத்து எடுத்து சென்றதை பார்த்தேன். அந்த குப்பையை அது சாப்பிட்டால் இரண்டு நாட்களில் இறந்து விடும். இப்படி நாம் எங்கேயோ தூக்கி வீசும் குப்பைகள் பல உயிரினங்களின் உயிருக்கு ஆபத்தாக முடிகின்றன. இவை கடலில் வாழும் உயிரினங்களுக்கு பெரிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக கடலில் கலக்கப்படும் ரசாயனக் கழிவுகளால் மீன்கள் இறக்கவும் செய்கின்றன.
நான் கழிவு நீர் கலக்கும் இடத்திலும் டைவிங் செய்திருக்கேன். அங்கு ஒரு மீன் கூட இருக்காது. மழை வெள்ள காலங்களில் தேங்கும் மழைநீர் பல இடங்களில் சாக்கடையுடன் கலந்து குப்பைகள் எல்லாம் அதில் மிதந்து கொண்டு இருக்கும். அதை அப்புறப்படுத்தி கடலுக்குதான் அனுப்புகிறோம். அதே சமயம் அங்குள்ள உயிரினங்களை இந்தக் கழிவுகள் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாம் நினைத்து பார்க்க வேண்டும். அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பொதுமக்களுக்கும் நம் வாழ்விடமான இந்த பூமியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பொறுப்பு இருக்கணும்’’ என்றவர், தான் வரைந்த பவளப்பாறை ஓவியங்கள் பற்றி கூறினார்.
‘‘நான் பார்த்த ஒவ்வொரு பவளப்பாறைகளையும் வரைந்திருக்கேன். அதாவது, அதை எப்படி பார்த்தேனோ அப்படியே வரைவேன். உதாரணமாக பவளப்பாறைகளில் பிளாஸ்டிக் குப்பைகள் சிக்கி இருந்தாலும், அதை நீக்காமல், அதையும் சேர்த்துதான் வரைவேன். கடலுக்கு அடியில் இருக்கும் உலகத்தை என்னுடைய ஓவியங்களின் வழியாக வெளி உலகத்துக்கு காட்டுகிறேன். அதோடு பவளப்பாறைகள் குறித்த ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்று தோன்றியது. டாக்குமென்டரி ஃபிலிம் மேக்கர் பிரியா துவஸ்சேரியின் அறிமுகம் கிடைத்தது.
என் ஸ்கூபா டைவிங் அனுபவங்கள் மற்றும் அழிவில் இருக்கும் பவளப்பாறைகள் இரண்டையும் மையமாக வைத்து எடுத்ததுதான் ‘கோரல் வுமன்’ ஆவணப்படம். இந்தப் படத்திற்காக தூத்துக்குடி, ராமேஸ்வரம், ராமநாதபுரம் சென்று அங்குள்ள பவளப்பாறைகளை படம் பிடித்தோம். தூத்துக்குடியில் பவளப்பாறைகள் இருந்தாலும் கடலில் சாக்கடை கழிவுநீர் கலப்பதால், அங்கு அவை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தன.
ராமேஸ்வரம் பாறைகளும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் குளித்துவிட்டு எறியும் துணிகள், சோபுகள் மற்றும் குப்பைகளால் கெட்டுக் கிடக்கிறது. இதில் ஓரளவு தப்பித்தது ராமநாதபுரம் பாறைகள்தான். கடல் தானே என்று எதைப்பற்றியும் யோசிக்காமல் குப்பைகளை கடலுக்குள் போடும் மக்களுக்கு அதற்கான விழிப்புணர்வு கண்டிப்பாக ஏற்படுத்த வேண்டும். மேலும் கடலில் குப்பைகள் கலக்காமல் அதனை மறுசுழற்சி செய்ய முயற்சி எடுக்க வேண்டும். அரசும் மக்களும் இணைந்து செயல்பட்டால்தான் இவை சாத்தியமாகும்’’ என்றார் உமா மணி.
தொகுப்பு: மா.வினோத்குமார்
செய்திகள்: வீரண்ணன்
The post ஓவியங்களாக கண்களை கவரும் பவளப்பாறைகள்! appeared first on Dinakaran.