×
Saravana Stores

மகாசக்தியின் ரகசியம் உணர்த்தும் நாமம்

“கூட குல்பா’’

நாம் ஒவ்வொரு முறையும் சென்ற நாமம் என்னவென்று ஒருமுறை புரிந்து கொண்டுவிட்டு அடுத்த நாமத்திற்குச் செல்ல வேண்டும். ஏனெனில், லலிதா சஹஸ்ரநாமத்தில் ஒவ்வொரு நாமமும் ஒவ்வொரு சாதனா வழியைக் கூறுகின்றது. ஒவ்வொரு நாமமும் அதிலுள்ள ரகசியத் திறவுகளைக் காட்டுகின்றது. ஒவ்வொரு நாமமும் அம்பிகையினுடைய சௌந்தர்யத்தையும் அதனோடு கலந்த பேரருளையும் காட்டுகின்றது. நாமமே இங்கு கருணையாக வெளிப்படுகின்றது. அதனால் ஒவ்வொரு நாமமும் நம்மை தியான வேள்விக்குள் கொண்டு செல்கின்றது. எனவே, கவனமாக பின் தொடர வேண்டுமென்பதே நாம் செய்ய வேண்டியதாகும். இதற்கு முந்தைய நாமமான இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணா பஜங்கிகா… என்கிற நாமத்தில் அம்பிகையின் கணைக்கால் பார்த்தோம்.

அதுமட்டுமல்லாது அதனுடைய தத்துவார்த்தத்தையும் கண்டோம்.  அம்பிகையின் முழங்கால்களையும் முன்னங்கால்களையும் இணைப்பதுதான், கணைக்கால் என்று பார்த்தோம். இதற்குப் பிறகு பாதத்தைப் பற்றிய வர்ணனைதான் வரவேண்டும். அதற்கு இடையில் மிகமிக முக்கியமான ஒரு பகுதி இருக்கிறது. ஆனால், அது மிகவும் சிறிய பகுதி. ஆனால், அது மிகவும் முக்கியமானது. ஏனெனில், இந்த முன்னங்காலை பாதத்தோடு இணைக்கக் கூடிய பகுதி. அதற்கு கணுக்கால் என்று சொல்வோமல்லவா… அது ஒருவிதமான எலும்பு. அது இந்தப் பாதத்தினுடைய அசைவை கட்டுப்படுத்தவல்லது. இப்போது அந்த கணுக்காலைப்பற்றிய வர்ணனையைத்தான் இங்கு வசின்யாதி வாக் தேவதைகள் சொல்லப் போகிறார்கள். அந்த வர்ணனையையே மிகவும் எளிமையாக ஒரே வார்த்தையில் சொல்லி விட்டார்கள். அதாவது கூட குல்பா என்று சொல்லி விட்டார்கள்.

குல்பம் என்றால் கணுக்கால். அதை ஏன் கூட குல்பம் என்று சொல்ல வேண்டுமெனில் அந்த கணுக்காலே மிக முக்கியமான ஒரு பகுதியாக இருக்கிறது. அந்த கணுக்காலில் ஏதாவது அடிபட்டால் நம்மால் அந்த பாதத்தையே நகர்த்த முடியாது. அந்த இடமே கொஞ்சம் மொழுக்கையாக இருக்கும். கொஞ்சம் அடிபட்டாலும் வலி தாங்க முடியாததாக இருக்கும். ஏனெனில், அந்த இடம் அவ்வளவு மிக முக்கியமானது. அதனாலேயே இயற்கை அந்த இடத்தில் சதைப்பற்றோடு கூடியதாக வைத்திருக்கிறது. இது சாதாரண மனிதர்களில் நாம் காண்பது. இப்போது அம்பாளுக்கு அந்த குல்பம் என்கிற பகுதியை வர்ணிக்கும்போது கூட குல்பா என்று வர்ணித்திருக்கிறார்கள். கூடம் என்றால் ரகசியமானது என்று அர்த்தம். ரகசியமாக மறைக்கப்பட்டிருக்கின்றது. அப்போது இந்த இடத்தில் குல்பம் என்கிற அந்த கணுக்கால் பகுதியானது சதையால் மறைக்கப்பட்ட கணுக்காலை உடையவள் என்று பொருள்.

சதையால் மறைக்கப்பட்ட கணுக்காலை உடையவள் என்று எந்த உவமையையும் சொல்லாமல் அப்படியே சொல்லி விட்டார்கள். அதாவது இந்த கூடம் என்கிற என்கிற வார்த்தைதான் இங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், கூடம் என்றால் ரகசியம் என்று பார்த்தோம். கொஞ்சம் இதற்கு முன்னே சொல்லப்பட்டிருக்கும் நாமத்தைப் பார்ப்போம். அதில் ஸ்மர தூணா பஜங்கிகா… என்று பார்க்கும்போது உலகியல் மன்மதனிடமிருந்து விடுபட்டு ஞானமயமான மன்மதனை அடையும்போது, அம்பிகையினுடைய பாதத்தை சரணடையும்போது உலக மன்மதன் எப்படி ஞான மன்மதனாக மாறுகிறான் என்றுதான் பார்த்தோம். நாம் எதையெல்லாம் லோகாயதமாக நினைத்துக் கொண்டிருந்தோமே, அது முழுவதும் அத்தியாத்மமாக மாறிவிட்டது.

ஒரு மாற்றம் நடக்கின்றது. நாம் எதையெல்லாம் கீழானது என்று நினைத்துக் கொண்டிருந்தோமே கீழானதே இல்லை என்ற நிலைக்குப் போய் எல்லாம் மேலானதாக மாறிவிட்டது. நாம் எதிலிருந்தெல்லாம் விடுபட வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தோமோ அதுவே நம்முடைய விடுதலைக்கும் காரணமாகி விட்டது. மேலானதைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை என்று தெரிந்ததற்கு பிறகு வேறு என்ன இருக்கிறது. நாம் எதையெல்லாம் லோகாயாதம் என்று நினைத்திருந்தோமோ அது எல்லாமே அத்யாத்மமம்தான் என்கிற ஞானம் வந்துவிடுகிறது. பாபாவிடம் ஒரு பக்தர் வந்து, ‘‘நான் எப்போது இந்த உலகாயத வாழ்விலிருந்து விடுபடுவேன்’’ என்று கேட்கிறார். அதற்கு பாபா, ‘‘எப்போது வரையிலும் நீ இது உலகாயதம், இது அத்யாத்மமம் என்று பிரித்துப் பார்க்கிறாயோ.

அந்த நிலையை நான் உனக்குக் கொடுக்க இயலாது’’ என்று சொல்லி விட்டார். மேலும், பாபா, ‘‘எப்போது உலகாயதம் இல்லவே இல்லையோ, இருப்பது அத்யாத்மமம் மட்டுமே என்று எப்போது உனக்குப் புரிகின்றதோ அன்றைக்கு அந்த நிலையை நான் உனக்கு அளிக்க இயலும்’’ என்றார். அப்போது உலகாயதமான இந்த வாழ்க்கையே, இதிலுள்ள பல்வேறு விஷயங்கள் அனைத்தும் உண்மையான ஆத்மீகமான வாழ்க்கைக்காகவே ஏற்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். நமது வாழ்வில் நடக்கும் எல்லா சின்னஞ்சிறு விஷயங்களுமே தீவிர ஆன்மீக சாதனைக்குள் செல்லும்போது அத்யாத்மமம் என்கிற முற்றிலும் ஆன்மிக மயமாக மாறி விடுகின்றது. அப்போது இந்த இடத்தில் இந்தவொரு மாற்றம் நிகழ்கிறது அல்லவா.

இன்னும் சொல்லப்போனால் வெளிப்புறத்திலிருந்து பார்க்கும்போது ஒரு மாற்றம் தெரிகிறது. அது ஒரு transition and transformation. இது எப்படி நிகழ்கிறது எனில் இருப்பதிலேயே அதி ரகசியமாக நிகழ்கிறது. அது இப்படித்தான் நிகழும் என்று நம்மால் சொல்ல முடியாது. இருப்பதிலேயே அது அவ்வளவு அதிரகசியமாக நிகழ்கிறதல்லவா… அந்த transformation எப்படி அதி ரகசியமாக நிகழ்கிறதோ அதுபோல அம்பிகையினுடைய கணுக்கால் பகுதி ரகசியமாக அதாவது கூடமாக இருக்கிறது. பெரும் ஆன்மிக யாத்திரையில் ஒரு சாதகனுக்குள் எப்படி மாற்றம் கூடமாக அதாவது ரகசியமாக நடக்குமோ அதுபோல இந்த கணுக்கால் பகுதி கூடமாக இருகிறது. அதனால் இந்த நாமத்திற்கு கூட குல்பா என்று பெயர். ஆன்மீக வாழ்வில், குருவைத் தவிர சிஷ்யனுக்குள் என்ன மாற்றம் நிகழ்கின்றது என்று அறியவே முடியாது. ரமண பகவானிடம் நிறைய பேர் எங்களிடம் என்னவிதமான மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்று கேட்கும்போதெல்லாம் அவர் அமைதியாக இருந்து விடுவதுண்டு.

காரணம் அது ரகசியமானது மட்டுமல்ல. அந்த மாற்றம் எப்படி நிகழும் எப்போது நிகழும் என்று அந்த சாதகனால் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது. இதற்கு முந்தைய நாமத்தில் உலக மன்மதனானவன் எப்படி ஞான மன்மதனாகிறான் என்று பார்த்தோமல்லவா… அதுபோல இங்கு மாற்றம் நிகழ்வதும் ரகசியமானது. அதனால்தான் இதற்கு முந்தையை நாமத்தையும் சேர்த்துச் சேர்தே புரிந்து கொள்ளும்போது அந்தந்த நாமத்திற்கான விளக்கம் எளிதாக விளங்கும். அது யோக ரூபமானது. அந்த யோகத்தை வரிக்கு வரி அடிக்கோடிட்டு விளக்க முடியாது. ஏனெனில், அந்த transition and transformation ஐ அனுபவிப்பவர்களுக்கே அது புரியாது. அல்லது சொல்லால் விளக்க இயலாத அளவுக்கு இருக்கும். அந்தப் பாதையானது வானத்தில் பறவை பறந்து போனது போலத்தான் இருக்கும்.

அதுவே இந்த நாமமான கூட குல்பா கூறும் ரகசியம். ஆத்மீக வாழ்க்கையில் ஒருவரது உள்ளார்ந்த நிலையில் நிகழும் மாற்றங்கள் அப்படியே வெளியே தெரியாது. அது ரகசியமானது. இதற்கான கோயிலாக நாம் ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமியைச் சொல்லலாம். இங்குள்ள அம்பாள் பெயர் யோகாம்பாள் ஆகும். தமிழகத்திலுள்ள ஆலயங்கள் எல்லாவற்றிலுமே உருவ வழிபாடுதான் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த ஆத்மநாதர் ஆலயத்தில் மட்டுந்தான் அருவ வழிபாடு நடைபெற்று வருகிறது. மூலஸ்தானத்தில் எந்த விதச் சிலையும் கிடையாது. அப்படிப் பார்த்தாலும் இது மற்ற கோவில்களில் அடங்காத கோயில் என்பது சொல்லாமலே விளங்கும். இதே போல இக்கோயிலின் சிறப்புக்களைக் கூறத் தலைப்பட்டால் அது ஏட்டில் அடங்காது.

உருவம் இல்லை
கொடி மரம் இல்லை
பலி பீடம் இல்லை
நந்தி இல்லை

இந்தக் கோயிலிலே மற்ற சிவாலயங்களில் இருப்பது போல கொடிமரம் இல்லை. பலி பீடமும் இல்லை. நந்தியும் இல்லை. சுவாமிக்கு உருவமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இங்கு வருகின்ற பக்தர்களுக்கு மற்ற கோயில்களைப் போல தீப ஆராதனையினைத் தொட்டு வணங்க அனுமதிப்பதும் இல்லை. மாணிக்கவாசகர் சோதியிலே கலந்துள்ளார் என்பதாலேயே தீபம் தருவதில்லை. எல்லா ஆலயங்களிலும் பூசை நடைபெறும்போது பச்சை அரிசியிலே அமுது படைத்து நெய்வேத்தியம் செய்வார்கள். ஆனால், இந்த ஆவுடையார் கோயிலிலே 6 காலத்திற்குமே புழுங்கல் அரிசியால்தான் அமுது படைக்கப்படுகிறது. அதோடு பாகற்காய் கறியும் கீரையும் சேர்த்துப் படைக்கப்படுவது இங்கு மட்டும்தான். நரியைப் பரியாக்கியது இத் தல புராணத்தின் பெருமையாகும். ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே எழுப்பப்பட்ட இந்தக் கவிபாடும் கலைக் கூடத்தின் சிறப்புகளை ஒன்றிரண்டு வரிகளிலே சொல்லி அடக்கி விட முடியாது. இத்தலம் புதுக்கோட்டைக்கு அருகே அமைந்துள்ளது.

ரம்யா வாசுதேவன் மற்றும் கிருஷ்ணா

The post மகாசக்தியின் ரகசியம் உணர்த்தும் நாமம் appeared first on Dinakaran.

Tags : Mahashakti ,
× RELATED மகாசக்தி மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா