×

தேசிய ஊரக வேலை திட்ட விதிமுறையில் திருத்தம் செய்து குளம், குட்டை, ஊரணிகளை இயந்திரம் மூலம் தூர்வார வேண்டும்

*மழைநீர் வீணாவதை தடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

கோவில்பட்டி : ஆண்டுதோறும் மழைநீர் வீணாவதால் தேசிய ஊரக வேலை திட்ட விதிமுறையில் திருத்தம் செய்து குளம், குட்டை, ஊரணிகளை இயந்திரம் மூலம் தூர்வார வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.தமிழகத்தில் சுமார் 12,524 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் சுமார் 41,948 ஊரணிகள், குட்டைகள், பாசன கண்மாய்கள், குளங்கள் உள்ளன. இவை தவிர தமிழகத்தில் 46 ஆறுகள், 81 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் உள்ளன. சுமார் 40% மக்கள் விவசாயம் சார்ந்த தொழில் செய்கின்றனர்.

கடந்த 2007ம் ஆண்டுக்கு முன்பு வரை ஆண்டுதோறும் தமிழக அரசால் இயந்திரங்கள் மூலம் ஊராட்சிகளில் உள்ள ஊரணிகள், குட்டைகள், வரத்துகள் அந்தந்த ஆண்டு நிதிநிலைமைக்கேற்ப தூர்வாரப்பட்டு மழைநீர் சேமிக்கப்பட்டன. 2007 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்ட பிறகு நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாசன குளங்கள் தவிர்த்து பெரும்பாலான ஊராட்சி நீர்நிலைகள், ஊரணிகள், குட்டைகள் தேசிய ஊரக வேலை திட்டத்தில் மனிதசக்திகள் மூலம் தூர் வாரப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் மூலம் ஒவ்வொரு ஊரணிக்கும் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை மனிதசக்திகள் மூலம் தூர் வாரப்படுகிறது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு 17 ஆண்டுகளில் ஊரணிகளில் ஒருஅடி ஆழம் கூட முறையாக தூர்வாரப்படவில்லை. இதனால் ஆண்டுதோறும் நீர்நிலைகள் மண் மேடாகியும், புற்கள் முளைத்தும், மனித உயிர்களுக்கு உலை வைக்கக் கூடிய சீமை வேலிகருவை மரங்கள் வனம் போல் முளைத்து அடர்ந்து காணப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை வரலாறு காணாத வகையில் பெய்தும் மழை நீரை சேமிக்க முடியவில்லை.

ஆண்டுதோறும் பல லட்சம் செலவில் ஊரணிகள் மனிதசக்திகள் மூலம் தூர்வார செலவு செய்வதை தவிர்த்து இயந்திரங்கள் மூலம் தூர்வாரினால் மட்டுமே மழைநீரை முறையாக சேமிக்க முடியும். எனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் நீர்நிலைகள், வரத்துக்கால் தூர்வாருதல் பணியை இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளும் வகையில் விதிமுறைகளை திருத்தம் செய்து, வருகிற வடகிழக்கு பருவமழைக்கு முன் ஊராட்சிகளில் உள்ள வரத்துக் கால்வாய், குளம், குட்டை, ஊரணிகளில் இயந்திரங்கள் மூலம் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

The post தேசிய ஊரக வேலை திட்ட விதிமுறையில் திருத்தம் செய்து குளம், குட்டை, ஊரணிகளை இயந்திரம் மூலம் தூர்வார வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Kovilpatti ,Dinakaran ,
× RELATED கோவில்பட்டி ஆர்டிஓ ஆபீசில் காக்கி...