கோவில்பட்டி, ஜூலை 12: கோவில்பட்டியில் சாலையில் நின்றிருந்தவர்கள் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் பெண் காயமடைந்தார். கோவில்பட்டி புதுரோடு பிரதான சாலை எப்போதும் பள்ளி வாகனங்கள், இருசக்கர வாகனங்களில் அரசு அலுவலகங்கள், மருத்துவ மனைக்கு செல்வோர் என பரபரப்பாக இயங்கக்கூடிய சாலையாக இருந்து வருகிறது. இவ்வழியாகத்தான் தூத்துக்குடி, விளாத்திகுளம் செல்லக்கூடிய அரசு பேருந்துகள், கனரக வாகனங்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் நேற்று பிற்பகலில் இவ்வழியாக மாதாங்கோவில் பகுதியைச் சேர்ந்த சங்கர் அவரது மனைவி கனகரத்தினம் ஆகியோர் பைக்கில் வங்கிக்கு சென்று விட்டு, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரே உள்ள மரத்தின் கீழ் நின்று அவரது உறவினரிடம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மரம் சாய்ந்து அவர்கள் மீது விழுந்தது. இதில் கனகரத்தினத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் வந்து மரத்தை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
The post கோவில்பட்டியில் சாலையில் நின்றவர்கள் மீது மரம் விழுந்து பெண் காயம் appeared first on Dinakaran.