×

தமிழகத்தில் 188 இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

சென்னை: வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார். 188 இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அவசியமின்றி வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இயல்பைவிட 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ்க்கும் அதிமாக வெப்பம் நிலை அதிகரிக்கும் என்பதால் மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. அத்துடன் மே 2ம் தேதி வரை வெயில் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து நீடித்து வரும் வறண்ட வானிலை மற்றும் வெப்ப நிலை காரணமாக பெரும்பாலான இடங்களில் 108 டிகிரி வெயில் கொளுத்தி வருவதுடன், வெப்பநிலை அதை விட அதிமாக உணரப்படுகிறது. அதாவது 110 டிகிரி வெயில் இருந்தால் எப்படி வெப்பம் தகிக்குமோ அந்த அளவுக்கு வெப்ப நிலை உள்ளது. பகலில் பொதுமக்கள் வெளியில் வர முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் கடுமை காட்டி வருகிறது.

வயதானவர்கள், குழந்தைகள் வெளியில் வரவேண்டாம் என்று சுகாதாரத்துறை அறிவுரைகளை வழங்கி வருகிறது. பொதுமக்களுக்கு ஓஆர்எஸ்எல் பவுடர் வழங்கவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது. வெப்பத்தை தணித்துக் கொள்ள சிலர் குடும்பங்களுடன் மலைப் பகுதிகளுக்கு சுற்றுலா செல்கின்றனர். பெரும்பாலானவர்கள் வீடுகளில் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது ஏப்ரல் மாதம் முடிந்து மே தொடங்க உள்ள நிலையில் ஏப்ரல் மாதத்தில் எப்போதும் இல்லாத வகையில் 109 டிகிரி வரை வெயில் கொளுத்தியுள்ளது வானிலை ஆய்வாளர்களை சிந்திக்க வைத்துள்ளது. மேலும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் நிலவும் எல்-நினோ பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த சில மாதங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பம் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு லேசான மழை பெய்தாலும், வட தமிழகத்தில் பெரும்பாலும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மே 2ம் தேதி வரை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் முதல் 6 டிகிரி செல்சியசுக்கும் அதிமாக வெப்பநிலை உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதனால் மே 2ம் தேதி வரை தமிழ்நாட்டிலும் வெயில் மற்றும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழகத்தில் 188 இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai Corporation ,Commissioner ,Radhakrishnan ,Chennai ,Chennai Corporation Commissioner ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...