சென்னை: தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை செய்ய முடியாத நிலங்களான மேய்ச்சல் நிலங்கள், தரிசு நிலங்கள், கடற்கரை, ஆறு, ஓடை, வாய்க்கால் போன்ற நீர்நிலைகள், சாலை, இடுகாடு போன்ற பொது பயன்பாட்டிற்கான நிலப்பகுதிகள் புறம்போக்கு நிலம் எனக் குறிக்கப்படுகின்றன. இந்த புறம்போக்கு நிலங்ளை தமிழகம் முழுவதும் சிலர் ஆக்கிரமித்து தங்கள் பயன்பாட்டுக்காக கட்டிடங்களை கட்டி பயன்படுத்தி வருகின்றனர். அதுவும் நெருக்கடி மிகுந்த சென்னையில் நிலங்களின் மதிப்பு நாளுக்கு வேகமாக உயர்ந்து வரும் நிலையில், சென்னையில் எங்கெங்கு அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் உள்ளதோ அவைகளில் பல நிலங்கள் செல்வாக்கு உள்ளவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது. அப்படி பார்த்தால் சென்னையில் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து பல ஆயிரம் கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கட்டிடங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் ஒருபுறம் தமிழக அரசு எடுத்து வந்தாலும், நீதிமன்ற வழக்குகளால் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே, இதுபோன்ற ஆக்கிரமிப்பு கட்டிடங்களை தற்போது அகற்றுவதற்கு பதிலாக, அதன்மீது சொத்து வரி வசூலிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. அவ்வாறு வசூலிக்கும்பட்சத்தில் சென்னை மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், ஏற்கனவே மதுரை உயர் நீதிமன்றம், அரசு நிலம், புறம்போக்கு நிலங்களில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு எதன் அடிப்படையில் சொத்து வரி வசூல் செய்யப்படுகிறது? அரசு நிலம் என தெரிந்தும் அதில் தனிநபர் கட்டும் வீடுகளுக்கு எவ்வாறு வரி மதிப்பீடு செய்யப்படுகிறது என கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகராட்சி சார்பில் இதுவரை அங்கீகரிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு மட்டும் சொத்து வரி நிர்ணயித்து ஆண்டுக்கு இரண்டு முறை வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில், தற்போது சென்னையில் மட்டும், சுமார் 13 லட்சம் சொத்து உரிமையாளர்கள் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் ரூ.1800 கோடி சொத்து வரியாகக் கிடைக்கிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள், சுகாதார பணிகள், திடக்கழிவுகளை அகற்றுதல், தெரு விளக்குகள் அமைத்தல், பூங்காக்கள் மற்றும் சாலை பராமரித்தல், பொது சுகாதாரம் நோய் தடுப்பு பணி போன்ற மிக மிக அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள், நீர்வழித் தடங்களின் கரையோரம், நீர்நிலைகளின் அருகில், முன்பு நீர்நிலையாக இருந்து தற்போது முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் என 100க்கும் மேற்பட்ட இடங்களில் பல்லாயிரக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் நடத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த சூழ்நிலையில் தான் ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கும் சொத்து வரி வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதற்கான அனுமதி கோரி தமிழ்நாடு அரசுக்கு மாநகராட்சி தரப்பில், கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. அனுமதி கிடைத்ததும், மாநகராட்சி மன்றத்தின் அனுமதி பெற்று செயல்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டன. அதன்பேரில், மாநகராட்சி ஆணையர், மாவட்ட நிர்வாகத்திடம் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: முதற்கட்டமாக 20,000 கட்டிடங்களுக்கு சொத்து வரி மதிப்பீட்டை தொடங்க திட்டமிட்டுள்ளோம். சென்னையில் தி.நகர், ஆலந்தூர், மணலி, மாதவரம் ஆகிய பகுதிகளில் புறம்போக்கு நிலத்தில் கட்டிடங்கள் அதிக அளவில் உள்ளன. இதுபோன்ற கட்டிடங்களை சுட்டிக்காட்டி அவற்றை மதிப்பீடு செய்து சொத்து வரி வசூலிக்க முடியும் என்று அரசிடம் விளக்கம் தரப்பட்டுள்ளது.
கிராம நத்தம் தவிர தி.நகர் போன்ற பகுதிகளில் சட்டப்பூர்வ வாரிசுகள் இல்லாமல் உரிமை கோரப்படாத நிலங்களில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் உள்ளன. சென்னை மாநகரில் இதுபோன்ற நிலங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொத்துகள் உள்ளன. அவர்களுக்கு பட்டா இல்லை. ஆனால் பல தலைமுறைகளாக குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதுபோன்ற சொத்துகள் மீது அரசு முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று விரிவாக்கப்பட்ட பகுதிகளில் கிராம நத்தம் உள்ள பல கட்டிடங்களுக்கு சொத்துவரி மதிப்பீடு செய்யவில்லை. குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறை நிலங்கள் மற்றும் வக்பு வாரிய நிலங்களில் உள்ள பல கட்டிடங்களுக்கு சொத்து வரி மதிப்பீடு செய்யவில்லை. எனவே, பட்டா இல்லாத கட்டிடங்களுக்கும் சொத்து வரி நிர்ணயம் செய்வது குறித்து விரைவில் முடிவு எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post அனுமதி கோரி தமிழக அரசுக்கு கோப்புகளை அனுப்பியது புறம்போக்கு நிலங்களில் உள்ள கட்டிடங்களுக்கும் சொத்து வரி: சென்னை மாநகராட்சி அதிரடி appeared first on Dinakaran.