திருவொற்றியூர், ஏப்.29: மணலி மண்டலம், 17வது வார்டுக்குட்பட்ட செட்டிமேடு கிராமத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு பெரும்பாலும் விவசாயம் மற்றும் கூலி தொழில் செய்பவர்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2014 -15ம் ஆண்டு ரூ.11 லட்சம் செலவில் செட்டிமேடு கோயில் அருகே பல்நோக்கு மையக் கட்டிடம் கட்டப்பட்டது. இதில் செட்டிமேடு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மஞ்சள் நீராட்டு விழா, பிறந்தநாள் விழா, மற்றும் சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளை செலவில்லாமல் நடத்தி வருகின்றனர்.
மேலும் கோயில் திருவிழா நாட்களில் உணவு பரிமாறுதல் மற்றும் அன்னதானம் கூடமாகவும் பல்நோக்கு மையக் கட்டிடம் பயன்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கட்டிடம் தற்போது முறையாக பராமரிப்பில்லாமல் பொலிவிழந்து காணப்படுகிறது. ஆயிரக்கணக்கான மக்களுக்கு பயன்படும் பல்நோக்கு மையத்தை புதுப்பித்து தரவேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மணலி மண்டல அதிகாரிகளுக்கு பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
மேலும் ஏழை எளியவர்கள் இலவச சுபநிகழ்ச்சிகளுக்காக பயன்படுத்தும் பல்நோக்கு மையத்தை மாற்றுத் திட்டத்திற்கு பயன்படுத்த அதிகாரிகள் முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே பழுதடைந்துள்ள பல்நோக்கு மையத்தை புதுப்பித்து எப்பொழுதும் போல சுப நிகழ்ச்சிகளுக்காக பயன்படுத்தும் கூடமாகவ பயன்படுத்த வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சென்னை மாநகராட்சி உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மணலி மண்டலத்தில் பழுதடைந்து காணப்படும் பல்நோக்கு மையத்தை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.