கரூர், ஏப்.29: கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகளுக்கு உயர் வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.கரூர் மாவட்டம், ஆதிதிராவிடர் நலத்துறையுடன் இணைந்து ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகளுக்கான உயர் கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் நோக்கோடு பதினொன்று மற்றும் 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து வழிகாட்டு ஆலோசனை நடைபெற்றது.
எம்எம்டி மற்றும் நேச்சர் தன்னார்வ இயக்கம் ஒருங்கிணைப்பாளர் மதி மற்றும் உத்வேக பேச்சாளர்கள் கலந்து கொண்டு 12ம் வகுப்பு முடித்த பிறகு மாணவ, மாணவிகள் என்ன படிக்கலாம்? என்பதை விளக்கும் பொருட்டு “கல்லூரிக் கனவு” எனும் உயர் வழிகாட்டி நிகழ்ச்சி கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் கடந்த 26ம்தேதி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கலையரங்கத்தில் நடைபெற்றது.
இதில் கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், தாந்தோணி, அரவக்குறிச்சி, க.பரமத்தி, குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் வட்டாரங்களில் உள்ள அரசு பள்ளிகளில் 12ம் வகுப்பு பயிலும் 207 மாணவ, மாணவியர்களும், 11ம் வகுப்பு படிக்கும் 61 மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்க்சியில் கரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சண்முகவடிவேல், கரூர் கோட்டாட்சியர் முகமது பைசல், ஆதிதிராவிட நல இயக்குநரக சிறப்பு திட்ட அலுவலர் ராஜா ஜெகஜீவன், தாட்கோ மாவட்ட மேலாளர் பாலமுருகன் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
The post அரசு பள்ளிகளில் 11, 12ம் வகுப்பு படிக்கும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு உயர் வழிகாட்டி நிகழ்ச்சி appeared first on Dinakaran.