திருவண்ணாமலை, ஏப்.29: சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம் தொடங்குவதால், அண்ணாமலையார் கோயிலில் வரும் 4ம் தேதி முதல் தாராபிேஷகம் நடைபெற உள்ளது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடையின் தாக்கம் வெகுவாக அதிகரித்திருக்கிறது. இந்த ஆண்டு கோடை வெயில் மார்ச் மாதத்திலேயே தொடங்கியது. திருவண்ணாமலையில் தற்போது அதிகபட்சம் 106 டிகிரி வரை வெயில் சுட்டெரித்தது. மேலும், இயற்கையின் சமநிலையற்ற தன்மை காரணமாக இந்த ஆண்டு மேலும் வெயில் பாதிப்பு கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு அறிக்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடும் வெயிலால் மக்கள் தவிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில், கோடை வெயிலின் உச்சமாக கருதப்படும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில், வரும் 4ம் தேதி தொடங்கி, 29ம் தேதி வரை உள்ளது. அக்னி நட்சத்திரத்தின் முதல் 15 நாட்களுக்கு வெயில் அதிகமாகவும், பின்னர் கோடை மழையின் காரணமாக வெயில் பாதிப்பு படிப்படியாக குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் அக்னி நட்சத்திர காலத்தில் இறைவனின் திருமேனியை குளிர்விக்கும் விதமாக, அக்னி தோஷ நிவர்த்திக்கான தாராபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, வரும் 4ம் தேதி முதல் வரும் 29ம் தேதி வரை தாராபிஷேகம் நடைபெறும்.
The post அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் 4ம் தேதி முதல் தாராபிஷேகம் appeared first on Dinakaran.