மதுரை: பாஜ மாவட்ட ஊடகப் பிரிவு முன்னாள் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தென்மண்டல ஐஜி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை, அவனியாபுரம், பர்மா காலனியைச் சேர்ந்தவர் காளிதாஸ். மதுரை மாவட்ட பாஜ ஊடக பிரிவின் முன்னாள் தலைவர். விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தலுக்காக கட்சி ஒதுக்கிய நிதியை முறையாக பயன்படுத்தாமல் சுருட்டியதாக சமீபத்தில் வெடித்த சர்ச்சையைத் தொடர்ந்து இவர் பதவி பறிக்கப்பட்டது.
இவர் தென்மண்டல ஐஜி அலுவலகத்தில் நேற்று முன்தினம் அளித்துள்ள புகார் மனு: நான் மூன்று ஆண்டுகளாக பாஜ ஊடகப் பிரிவு மாவட்ட தலைவராக இருக்கிறேன். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக தீவிரமாக பணியாற்றி வந்தேன். விருதுநகர் நாடாளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேலும், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமாரும் மாநில தலைமையிலிருந்து கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தல் பணிக்காக கொடுத்த நிதியை முறையாக பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் வெற்றிவேல், சசிகுமார் மீது பாதிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் சமூக வலைத்தளங்கள் மற்றும் சுவரொட்டிகள் போன்ற பல்வேறு விதத்திலும் பதிவிட்டு குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு நான் தான் காரணம் என நினைத்து, என்னை கொலை செய்துவிடுவேன் என தொடர்ந்து மிரட்டல் வருகிறது. கடந்த, 19ம் தேதி தேர்தல் நாளன்று வளையன்குளம் அடுத்த எலியார்பத்தியில் உள்ள உணவகத்தில் கட்சியின் மேலிட பொறுப்பாளர்களான மதுரை மேற்கு மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம் மற்றும் மதுரை மாவட்ட செயலாளர் ராக்கப்பன் முன்பு, வெற்றிவேல் என்னை கொலை செய்வதாகவும், சசிகுமார் என் கை, கால்களை உடைப்பதாகவும் மிட்டினர்.
வெற்றிவேலுடைய நண்பரும், மாநில பட்டியல் அணி செயலாளருமான கீரைத்துறை சரவணன் எனது வீட்டு முகவரி மற்றும் அன்றாட பணி நடவடிக்கைகளை கேட்டு விபரங்களை சேகரித்துள்ளார். எனவே, மூவர் மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post மதுரையில் தேர்தல் பணம் சுருட்டியதாக போஸ்டர் பாஜ முன்னாள் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: சொந்த கட்சியினர் மீது ஐஜியிடம் புகார் appeared first on Dinakaran.