தூத்துக்குடி: மதம் மாறினால் ரூ.10 கோடி பணம் தருவதாகக் கூறி கோவில்பட்டி பிரமுகரிடம் ரூ.4.80 லட்சத்தை மோசடி செய்த தஞ்சை வாலிபரை தூத்துக்குடி மாவட்ட சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த வாலிபரிடம் ஐஎம்ஓ என்ற செயலி மூலமாக சொக்கநாதன் என்ற ஐடியில் இருந்து தொடர்பு கொண்டு ஒருவர் பேசி உள்ளார். அப்போது, இந்து மதத்தில் இருந்து மாறினால் ரூ.10 கோடி தருவதாக கூறினார்.
மேலும் இதற்காக அமெரிக்காவில் வங்கி கணக்கு துவங்க மற்றும் வருமானவரி செலுத்துவது உள்ளிட்ட காரணங்களுக்காக பணம் தருமாறு கேட்டுள்ளார். அதை நம்பி மேற்சொன்ன வாலிபர், ரூ.4 லட்சத்து 88 ஆயிரத்து 159 ரூபாயை ஜி பே மூலம் அனுப்பியுள்ளார். பின்னர் தான் மோசடி செய்யப்பட்டது தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்த வாலிபர் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சைபர்கிரைம் போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர்.
இதில், தஞ்சாவூர், ரெட்டிபாளையம்ரோடு, ஆனந்தம்நகர் பகுதியைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் மகன் ராஜவேல் (31) என்பவர் இந்த பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 26ம் தேதி தஞ்சை சென்ற சைபர்கிராம் போலீசார், ராஜவேலை கைது செய்தனர். பின்னர் அவரை தூத்துக்குடி அழைத்து சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையில் ராஜவேலை அடைத்தனர். மேலும் சைபர் கிரைம் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மதம் மாறினால் ரூ.10 கோடி தருவதாக கூறி ரூ.4.80 லட்சம் மோசடி: தஞ்சை வாலிபர் கைது appeared first on Dinakaran.