புதுக்கோட்டை: அதிமுக மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் காவிரி நீரை வழிமறித்து தனது சொந்த வயலுக்கு பயன்படுத்துவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: குஜராத் என்பது போதை பொருள் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதை பொருள்கள் வருகிறது.
பின்னர் பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதை பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல. ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோளப்பொரி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் காலத்தில் குடிநீர் பிரச்னைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை, வழிமறைத்து அவரது கல்லூரிக்கும் சொந்த வயலுக்கும் கொண்டு செல்கிறார்.
சட்டவிரோதமாக வயலுக்கு காவிரி தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்னை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள். தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் வட மாநிலங்களுக்கு பிரசாரம் செல்வது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.
The post காவிரி நீரை களவாடும் அதிமுக மாஜி அமைச்சர் மீது நடவடிக்கை: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.