புதுடெல்லி: மக்களவை தேர்தலையொட்டி ஆம் ஆத்மி வௌியிட்ட பிரசார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. டெல்லியின் 7 மக்களவை தொகுதிகளுக்கும் மே 25ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் புதிய மதுபான கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் கடந்த மாதம் 21ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் நெருங்கும் நிலையில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது அக்கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சி என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் கெஜ்ரிவால் கைதை தேர்தல் பிரசாரத்தின் ஒருபகுதியாக மாற்றும் உத்தியை ஆம் ஆத்மி செய்து வருகிறது. அதன்படி மக்களவை தேர்தலையொட்டி ஆம் ஆத்மி பேரவை உறுப்பினர் திலீப் பாண்டே எழுதி, பாடிய பிரசார பாடலை அக்கட்சி கடந்த 25ம் தேதி வௌியிட்டது. “கை விலங்குகளுக்கு வாக்குகளால் பதிலடி தருவோம்” என்ற பொருள் பொதிந்த ஆம் ஆத்மியின் பிரசார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தற்போது தடை விதித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி கல்வித்துறை அமைச்சர் அடிசி, “தேர்தல் ஆணையத்தின் கூற்றுபடி ஆளும் பாஜ, விசாரணை அமைப்புகளை மோசமாக விமர்சித்துள்ளதாக எங்கள் பிரசார பாடல் உள்ளது. ஆனால் பாஜவை பற்றி எங்கும் குறிப்பிடவில்லை. தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை. இதில் உண்மையான நிகழ்வுகளின் காணொலிகள் மட்டுமே உள்ளன. பாஜ சர்வாதிகாரம் செய்தால் அது சரி. அதுபற்றி யாராவது பேசினால் அது தவறு என்பது ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதையே காட்டுகிறது. பாஜவின் தேர்தல் விதிமீறல்கள் குறித்து நடவடிக்கை எடுக்கவும், எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை ஒடுக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் தேர்தல் ஆணையத்தை கேட்டு கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
The post கை விலங்குக்கு வாக்குகளால் பதிலடி தருவோம்” பிரசார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை: ஆம் ஆத்மி கண்டனம் appeared first on Dinakaran.