- ஜவ்வாதுமலை கோடை விழா
- மக்களவை
- திருவண்ணாமலை
- ஜவ்வாதுமலை
- கிழக்கு தொடர்ச்சி மலை
- Kollimalai
- செர்வராயன் மலை
- கல்வராயன் மலை
- திருவண்ணாமலை…
திருவண்ணாமலை, ஏப்.28: திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை கோடை விழா மக்களவைத் தேர்தல் காரணமாக இந்த ஆண்டு தாமதமாக நடைபெறும் நிலை ஏற்பட்டுள்ளது, எழில் கொஞ்சும் கிழக்குத் தொடர்ச்சி மலையில், கொல்லிமலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலைகளின் வரிசையில் அமைந்திருக்கிறது ஜவ்வாதுமலை. திருவண்ணாமலை மாவட்டத்தின் அடையாளமாகவும், இயற்கை அரணாகவும் திகழ்கிறது ஜவ்வாதுமலை. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,160 மீட்டர் உயரம் கொண்டது. ஜவ்வாதுமலையில் உற்பத்தியாகும் தேன், தினை, வரகு, சாமை, புளி, பலா, சந்தனம் போன்ற வனப்பொருட்கள் மிகவும் பிரசித்தி மிக்கது. எண்ணற்ற குண்டூசி வளைவுகள் நிறைந்த ஜவ்வாதுமலைப் நடுத்தர மக்களின் இன்ப சுற்றுலாவுக்கு ஏற்ற மலைப்பகுதியாகும்.
ஜவ்வாதுமலையில் அமைந்துள்ள கோலப்பன் ஏரி, பீமன் நீர்வீழ்ச்சி, காவலூரில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கி மையம், நூற்றாண்டுகள் பழமைமிக்க கண்ணாடி மாளிகை, சிறுவர் பூங்கா என சுற்றுலாவுக்கு உகந்த அம்சங்கள் இங்கு ஏராளம். இந்நிலையில், ஜவ்வாதுமலையின் எழிலை மக்கள் ரசிப்பதற்கு ஏற்றது கோடை காலம். எனவே, கடந்த 1997ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் ‘ஜவ்வாதுமலை கோடை விழா’ முதன் முதலில் நடத்தப்பட்டது. அதற்கு பொதுமக்களிடம் கிடைத்த வரவேற்பு காரணமாக, தொடர்ந்து ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், ஜவ்வாதுமலை கோடை விழாவில் பங்கேற்று மகிழ்வது வழக்கம். மலைவாழ் மக்களின் பண்பாட்டு சூழலை அறிந்துகொள்ள, பல்துறை பணி விளக்க கண்காட்சிகள் மூலம் அரசின் திட்டங்களை தெரிந்துகொள்ள இந்த விழா வாய்ப்பு அமைகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது. எனவே, அதுவரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், அரசு விழாவை நடத்த முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும், மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து, தேர்தல் நடத்தை விதிமுறையை தேர்தல் ஆணையம் விலக்கி கொள்ளும் வரை, கோடை விழாவுக்கான ஏற்பாடுகளை திட்டமிடுவது சாத்தியமில்லை. எனவே, இந்த ஆண்டு ஜூன் மாதம் இறுதியில் ஜவ்வாதுமலை கோடை விழா நடைபெறும் என தெரிகிறது.
The post ஜவ்வாதுமலை கோடை விழா தாமதமாகும் ஜூன் இறுதியில் நடைபெற வாய்ப்பு மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறையால் appeared first on Dinakaran.