பொள்ளாச்சி, ஏப். 28: பொள்ளாச்சி அருகே விஏஓவை தற்கொலைக்கு தூண்டியதாக கிராம உதவியாளர் மற்றும் மாத இதழ் ஆசிரியர் என 2 பேர் மீது போலீசார் வழகுப்பதித்து அவர்களை தேடி வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கூலநாயக்கன்பட்டி பனைமரத்துப்பாளையத்தை சேர்ந்தவர் கருப்புசாமி (39). இவர், திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கணக்கம்பபாளையத்தில் விஏஓவாக பணியாற்றி வந்தார். திருமணமாகவில்லை. இந்நிலையில், கடந்த 23ம் தேதி விஏஓ கருப்புசாமி, வீட்டில் இருந்தபோது பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதற்கிடையே, கருப்புசாமி வீட்டில் போலீசார் சோதனையிட்ட போது, அவர் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், எனது சாவுக்கு கிராம உதவியாளர் சித்ரா மற்றும் மாத இதழ் ஆசிரியர் மணி ஆகிய இருவரும் தான் பொறுப்பு.
அவர்கள் ஓராண்டாக அவதூறு பரப்பி என்னை அவமானப்படுத்தினர். மக்கள் பணியை நேசிக்கும் என்னை விஏஓ பணி செய்ய விடாமல் தடுத்த இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி, கருப்புசாமியின் உறவினர்கள் உடுமலை ஆர்டிஓ ஜஸ்வந்த் கண்ணனிடம் அளித்த மனுவில், ‘கருப்புசாமி சாவுக்கு மாத இதழ் ஆசிரியர் மணி மற்றும் கிராம உதவியாளர் சித்ரா தான் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’, என தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி விஏஓ கருப்புசாமியை தற்கொலைக்கு தூண்டியதாக கிராம உதவியாளர் சித்ரா மற்றும் மணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரையும், தேடி வருகின்றனர்.
The post பொள்ளாச்சி அருகே விஏஓ தற்கொலை: 2 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.