ஊட்டி, ஏப்.28: கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், முதுமலையில் வளர்ப்பு யானைகள் மாயார் ஆற்றில் ஆனந்த குளியல் போடும் வீடியோ வைரலாகி வருகின்றன. சமவெளி பகுதிகளில் ஆண்டுதோறும் கோடை வெயில் சுட்டெரிப்பது வழக்கம். நீலகிரி மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை இந்த கோடை வெயிலின் தாக்கம் காணப்படும். குறிப்பாக, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நீலகிரி மாவட்டத்தில் வெயில் அதிகமாக காணப்படும். குறிப்பாக, கூடலூர், பந்தலூர் மற்றும் முதுமலை போன்ற பகுதிகளில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படும். இம்முறை கோடை மழை பெய்யாத நிலையில், நீலகிரி மாவட்டம் முழுவதுமே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. தற்போது, முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது.
இதனால், புலிகள் காப்பத்திற்குட்பட்ட பகுதிகளில் வாழும் வனவிலங்குகள் நீர் நிலைகளை ேதடி செல்ல துவங்கிவிட்டன. மேலும், புலிகள் காப்பகம் வறண்டு காணப்படுகிறது. பச்சை நிறத்தை பார்ப்பதே அரிதாக உள்ளது. இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் உள்ள யானைகள் வெயிலை தணிக்க அங்குள்ள மாயார் ஆற்றில் சென்று ஆனந்த குளியல் போடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளன. ஆழமான பகுதிகளுக்குள் சென்று, தண்ணீரை தும்பிக்கையால் எடுத்து உடல் முழுவதும் வாரி வீசி விளையாடி வருகின்றன.
இந்நிலையில், ஒரு யானை தனது பாகனை முதுகில் சுமந்த படியே ஆற்றில் ஆனந்த குளியல் போடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பலரும் கண்டு ரசித்து வருகின்றனர். மேலும், முதுமலை செல்லும் சுற்றுலா பயணிகள் வளர்ப்பு யானைகள் ஆற்றில் ஆனந்த குளியல் போடுவதை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர்.
The post கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மாயார் ஆற்றில் வளர்ப்பு யானைகள் ஆனந்த குளியல் appeared first on Dinakaran.