- வன அதிகாரி
- கூடலூர் பிரிவு
- குடலூர்
- நெலாக்கோட்டை ஊராட்சி
- பிதர்காட் காடு
- நெலக்கோட்டை
- மூல நெலாக்கோட்டை
- விளாங்கூர்
கூடலூர்,ஏப்.28: கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை ஊராட்சி பிதர்காடு வனச்சரங்கத்திற்கு உட்பட்ட பகுதியாகும். மூல நெலாக்கோட்டை பஜார்,விலங்கூர் மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் கடந்த பல மாதங்களாக சுற்றித் தெரியும் ஒற்றை யானையை யானைகள் காப்பகத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க கோரி நெலாக்கோட்டை வியாபாரிகள் சங்கம் மற்றும் அனைத்து அரசியல் கட்சி அமைப்புகள் சார்பில் நேற்று கூடலூர் கோட்ட வன அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. நெலாக்கோட்டை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், எம்எல்ஏ பொன் ஜெயசீலன், முன்னாள் எம்எல்ஏ திராவிட மணி, நெல்லியாளம் நகர திமுக செயலாளர் சேகர், தலைமை செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம், கூடலூர் நகர செயலாளர் இளஞ்செழியன்,ஒன்றிய செயலாளர் லியாக்கத் அலி மற்றும் ஊர் மக்கள் கூடலூர் கோட்ட வனஅலுவலரை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: இந்த யானை அடிக்கடி பகல் நேரங்களிலேயே நெலாக்கோட்டை பஜாரில் நடந்த சென்று பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக திரிகிறது.
மேலும் இரவில் இப்பகுதிக்கு வரும் யானை கடைகளை உடைத்தும் சேதப்படுத்தி வருகிறது. ஊருக்குள் புகுந்து பழகிய இந்த யானையை வனத்துறையினர் விரட்டினாலும் அது மீண்டும் ஊருக்குள் வருவதையே வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்த யானையின் நடமாட்டம் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக உள்ளதோடு, உடமைகள் விளை பயிர்களும் சேதம் அடைகின்றன. எனவே இந்த யானையை மயக்க ஊசி போட்டு பிடித்து முதுமலையில் உள்ள யானைகள் வளர்ப்பு முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு வனப்பகுதியில் போதிய உணவு ஆதாரம் இல்லாததால் அவை ஊருக்குள் வருவதாகவும், அவற்றிற்கு வனப்பகுதியில் போதிய அளவு உணவு கிடைக்கும் வகையில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க சோலார் மின்வேலி அமைக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து கோட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில்:கூடலூர், பந்தலூர் சுற்றுவட்ட பகுதிகளில் 90 இடங்களில் யானைகள் உள்ளிட்ட வனவிலங்கு நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றைக் கண்காணித்து தேவையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு வனவிலங்குகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படும். இந்த கேமராக்களில் எந்த ஒரு விலங்குகளின் நடமாட்டம் பதிவானதும் உடனே அது நாடுகானியில் தாவர மரபியல் பூங்காவில் அமைக்கப்பட உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரடியாக தகவல் அனுப்பும்.இங்கு 24 மணி நேரமும் வனபணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு எந்த இடத்தில் வனவிலங்கு நடமாட்டம் உள்ளதோ அங்குள்ள வனபணியாளர்களுக்கு உடனடியாக தகவல் அளித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தார்.
The post காட்டு யானையை பிடிக்க கோரி கூடலூர் கோட்ட வன அலுவலரிடம் மனு appeared first on Dinakaran.