கரூர், ஏப்.28: கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சிஐடியூ கலெக்டருக்கு விடுத்துள்ள அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், கரூர் மாவட்டத்தில் கடும் வெப்ப அலைவீச்சிலிருந்து தூய்மை பணியாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளது. உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க சிஐடியூ தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் முருகேசன் மாவட்ட கலெக்டருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்திலுள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 8 பேரூராட்சி, 157 ஊராட்சிகளில் 5000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த நிரந்தர அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.
இதில் பெரும்பான்மையோர் பெண்களே ஆவார்கள். இவர்களது பணி நேரம் என்பது கரூர் மாநகராட்சியில் காலை 6.00 மணி முதல் மதியம் 2 மணி வரையும், நகராட்சி, பேரூராட்சிகளில் காலை 6.00 மணி முதல் 11 மணி வரையும் மீண்டும் மதியம் 2:00 மணி முதல் மாலை 5.00 மணி வரையும், ஊராட்சிகளில் காலை 6.00 மணி முதல் மதியம் 2.00 மணி மற்றும் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி என உள்ளது.
பெரும்பாலும் குறித்த நேரத்தில் பணி முடிப்பது என்பதின்றி, கூடுதலாக ஒரு மணி நேரமோ சில இடங்களில் அதற்கும் மேலாகவோ வேலை நேரம் நீட்டிக்கப்பட்டு வேலை வாங்கப்படுகிறது. தற்போது கோடை வெப்பம் கடந்த காலங்களை விட மிக அதிகமாக உள்ளது. வெப்ப அலை வீச்சு காரணமாக, 105 டிகிரி முதல் 115 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இந்தநிலை மே மாதம் 15 வரை நீடிக்கும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த வெப்ப அலை காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்படுவதோடு, உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் மதியம் 12.00 மணியிலிருந்து மதியம் 3.00 பொதுமக்கள் வெயிலிலிருந்து தப்பிக்க வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இதன் அடிப்படையில் தூய்மை பணியாளர்களுக்கும் அதிக வெயில் அடிக்கும் நேரத்தில் வேலை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.
The post கடும் வெப்ப அலைவீச்சிலிருந்து தூய்மை பணியாளர்களை பாதுகாக்க வேண்டும் appeared first on Dinakaran.