×

நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள டிவியில் வீடியோ வராததால் பரபரப்பு

ஊட்டி: தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஊட்டி வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள டிவியில் வீடியோ வராததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பவானிசாகர், மேட்டுப்பாளையம், அவிநாசி, குன்னூர், ஊட்டி மற்றும் கூடலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஊட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் 160 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளதை உறுதி செய்யும் வகையில் அனைத்து அரசியல் கட்சியினர் பார்க்கும் வகையில் பெரிய அளவிலான டிவிகள் கட்டுப்பாட்டு அறையில் பொருத்தப்பட்டுள்ளது. நேற்று இந்த முகவர் அறையில் வைக்கப்பட்டுள்ள டிவிகளில் திடீரென சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் வீடியோக்கள் துண்டிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். உடனடியாக பழுதை சீர்செய்யுமாறு உத்தரவிட்டார். ஊழியர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

சுமார் 20 நிமிடம் கழித்து தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு அனைத்து டிவிகளிலும் வீடியோக்கள் வருமாறு ஊழியர்கள் சீரமைத்தனர். இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில்,“ஊட்டி அரசு பாலிடெக்னிக் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் முறையாக வேலை செய்தன. அங்கு அனைத்து கேமராக்களிலும் எடுக்கப்பட்ட வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அரசியல் கட்சி முகவர்கள் பார்க்கும் அறையில் வைக்கப்பட்டிருந்த டிவிக்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிறிது நேரம் வீடியோ வரவில்லை.அது உடனடியாக சரி செய்யப்பட்டு மீண்டும் வீடியோ வரும் வகையில் சீரமைக்கப்பட்டது. வேறு எந்த காரணமும் இல்லை’’ என்றார்.

The post நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள டிவியில் வீடியோ வராததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Nilgiri Constituency polling center ,Ooty ,center ,Bhavanisagar ,Mettupalayam ,Avinasi ,Coonoor ,Kudalur ,Nilgiri ,
× RELATED ஊட்டி- கோத்தகிரி சாலையில் மண்சரிவை...