கவுகாத்தி: உத்தரப்பிரதேசத்தில் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயர் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம் கவுகாத்தியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய கார்கே, ‘‘ஊழல் செய்தவர்களை சிறையில் அடைக்க வேண்டும் என்று பாஜ கூறினாலும், ஊழல் குற்றச்சாட்டுக்களை கொண்டுள்ள தலைவர்கள் பாஜவில் சேரும்போது அவர்கள் மடியில் உட்காரவைக்கப்பட்டு மாநிலங்களவை அல்லது சட்டமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
உத்தரப்பிரதேசத்தின் அமேதி மற்றும் ரேபரேலி மக்களவை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் என அறிந்து கொள்வதற்கு ஒரு சில நாட்கள் காத்திருக்க வேண்டும். மக்களிடம் இருந்து வேட்பாளர்களின் பெயர்கள் வந்து அதில் நான் கையெழுத்திட்டவுடன் பெயர்கள் அறிவிக்கப்படும். தொகுதிகளை மாற்றுவது குறித்து காங்கிரஸ் தலைவர்களை கேள்வி கேட்பவர்கள் வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோர் எத்தனை முறை தங்களது தொகுதிகளை மாற்றினார்கள் என்பதையும் கூற வேண்டும். காங்கிரஸ் கட்சியானது ஓடும் நதி போன்றது. கட்சியில் வளர்ந்து பின்னர் அதில் இருந்து வெளியேறுவதால் அது பாதிக்கப்படாது” என்றார்.
The post அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் ஓரிருநாளில் அறிவிப்பு: கார்கே தகவல் appeared first on Dinakaran.