தரம்பூர்: நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த என் தந்தையை துண்டுகளாக வீட்டுக்கு கொண்டு வந்தேன் என காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி உருக்கமாக தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் வால்சாத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அனந்த் படேலை ஆதரித்து தரம்பூர் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது: சாமானிய மக்களை பலவீனப்படுத்தவும், அவர்களுக்கான உரிமைகளை பறிக்கவும் அரசியலமைப்பை மாற்ற பாஜ விரும்புகிறது. பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பை மாற்றுவோம் என அதன் தலைவர்களும், வேட்பாளர்களும் சொல்கின்றனர். ஆனால் மோடி அதை மறுக்கிறார். இது அவர்களின் தந்திரம். முதலில் பாஜ செய்ய விரும்புவதை மறுக்கும். ஆட்சிக்கு வந்த பின் அதை செய்யும்.
மோடியின் சொந்த மாநிலமான குஜராத் பல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளது.. மோடியால் உக்ரைன் – ரஷ்யா போரை ஒரு நொடியில் நிறுத்தி விட முடியும் என பாஜவினர் சொல்கின்றனர். அந்த சக்தி வாய்ந்த மோடியால் ஏன் வறுமையை ஒழிக்க முடியவில்லை. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த என் தந்தையின் உடலை துண்டுகளாக வீட்டுக்கு எடுத்து வந்தேன். அவரைபோல் தியாகம் செய்த பிரதமர்களை நான் பார்த்துள்ளேன். ஆனால் நாட்டு மக்களிடம் பொய் சொல்லும் ஒரே பிரதமர் மோடி மட்டும்தான். இவ்வாறு அவர் பேசினார்.
70 கோடி மக்கள் வேலையின்றி தவிப்பு
மகாராஷ்டிராவில் லத்தூர்(தனி) தொகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, “பாஜ தலைமையிலான 10 ஆண்டு ஆட்சியில் 30 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. நாடு முழுவதும் 45 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மோடியின் இந்த 10 ஆண்டு ஆட்சியில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது. நாடு முழுவதும் இளைஞர்கள் உள்பட 70 கோடி மக்கள் வேலையின்றி அவதிப்படுகின்றனர். பாஜ ஆட்சியில் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், இன்னல்கள் அதிகரித்துள்ளது’’ என்றார்.
The post நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த என் தந்தையை துண்டுகளாக வீட்டுக்கு எடுத்து வந்தேன்: பிரியங்கா காந்தி உருக்கம் appeared first on Dinakaran.