×
Saravana Stores

இந்த வார விசேஷங்கள்

சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் விடையாற்றி உற்சவம்
27.4.2024-சனி

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டைக்கு அருகே உள்ளது சோழ சிம்மபுரம். சோளிங்கர் என்பார்கள். 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். மலைமேல் அமைந்துள்ள இக்கோயிலில் பெருமாள் யோகநரசிம்மராக அருள் வழங்குகிறார். இம்மலைக் கோயிலுக்குச் செல்ல 1,305 படிகள் ஏறிக் கடக்க வேண்டும். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்ட கோயிலாகும். அக்காரக்கனி என்று இங்குள்ள பெருமாளை திருமங்கையாழ்வார் அழைக்கின்றார்.
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை
என்னுள்

புக்கானை புகழ்சோ் பொலிகின்ற பொன்
மலையைத்
தக்கானை கடிகைத் தடங்குன்றின்
மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்து
போனேனே!”

தொண்டைநாட்டு திருப்பதிகளில் 22 ஆம் திருத்தலம் இது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பிரம்மோற்சவம் சித்திரைப் பெருவிழாவாக நடைபெறும். காலையும் மாலையும் வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வீதி வலம் வந்து காட்சி தருவார் அதன் நிறைவு நாளான இன்று விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது.

சங்கடஹர சதுர்த்தி
27.4.2024-சனி

முழுநிலா நாளான பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காவது திதிக்கு சதுர்த்தி திதி என்று பெயர். தேய்பிறை சதுர்த்திக்கு சங்கடஹர சதுர்த்தி என்று பெயர். ஹரம் என்றால் நீக்குதல். சங்கடங்களை நீக்குகின்ற சதுர்த்தி விரதம் என்று இந்த நாளைச் சொல்லலாம். இந்த நாள் விநாயகர் விரதத்திற்கு உரிய நாள். இந்த நாளில் விரதம் இருந்து, மாலையில் பக்கத்தில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று, அங்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொள்வதும், அபிஷேகங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவதும் குறிப்பாக விநாயகருக்கு அறுகம் பூ மாலை கட்டி சூட்டுவதும் மிகச் சிறப்பான நற்பலன்களைத் தரும். குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். நினைத்த காரியங்கள் வெற்றி ஆகும். காரியத்தடைகள் நீங்கும். விநாயகர் விரதமிருக்க வேண்டிய சங்கடஹர சதுர்த்தி நாள் இன்று.

வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன்
28.4.2024-ஞாயிறு

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு அம்மன் கோயிலுக்கும் ஒவ்வொரு விசேஷத்துவம் உண்டு. அந்த அடிப்படையில் தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள திருக்கோயில் ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோயில். இது முல்லைப் பெரியாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்தத் திருக்கோயில் உலக பிரசித்தி பெற்ற திருக்கோயில் ஆகும். இங்கே சித்திரைத் திருவிழா, கத்தரி வெயிலின் துவக்கத்தில் உற்சவமாக நடைபெறும். கொடியேற்றத்துடன் தொடங்கி 8 நாட்கள் இரவும் பகலும் குதூகலமாக நடக்கும். தேனிக்குப் பக்கத்தில் இருக்கக்கூடிய கிராம மக்களை வீரபாண்டியை நோக்கி இழுக்கும்.பக்தர்கள் அம்மனுக்கு காவடி அக்னி சட்டி எடுத்தல், பூமிதித்தல் (அதாவது தீக்குழி விழா) என சிறப்பாக தங்கள் பிரார்த்தனையைச் செலுத்துவார்கள். இத்தலத்தின் வரலாறு நமக்கு இத்தலத்தின் பெருமையைச் சொல்லும்.

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் வீரபாண்டியன் தன்னுடைய இரண்டு கண்களின் பார்வையையும் இழந்தான். வைத்தியம் பார்த்தும் பலனில்லை. பார்வையைப் பெறுவதற்காக பல கோயில்களுக்குச் சென்றான். இங்குள்ள கௌமாரியம்மன் கோயிலுக்கு வந்து அம்மனை வணங்கியதன் மூலமாக கண்பார்வை கிடைக்கப் பெற்றான். அதனால் இந்த அம்பாளை வணங்கு பவர்களுக்கு கண்பார்வைக் குறைவு நோய்கள் தீரும். மற்றும் கோடை காலத்தில் வரக்கூடிய பல்வேறு உஷ்ணநோய்களும் நீங்கிவிடும். இங்கே வித்தியாசமாக உடலில் சேறு பூசி கௌமாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதும் உண்டு. அந்த திரு விழாவின் ஒரு நாள் இன்று. அம்மன் வீதி உலா காட்சி நடைபெறும்.

வராக ஜெயந்தி
28.4.2024 – ஞாயிறு

பகவான் உலகைப் படைத்து பல்வேறு உயிரினங்களையும் படைத்தான். அதில் மிகச் சிறந்த உயிரினமாக மனிதர்களையும் படைத்தான். அதனால் தான் பெரியவர்கள் “அரிது அரிது மானிடராதல் அரிது” என்று சொன்னார்கள். அந்த மனிதப் பிறவியை, அர்த்தமுள்ள பிறவியாக மாற்றுவதற்காக, பகவானே பல்வேறு அவதாரங்களையும் எடுத்தான். எண்ணற்ற அவதாரங்களை எடுத்தாலும் குறிப்பாக தசாவதாரங்களைச் சொல்லுவார்கள். தசாவதாரங்களில் மூன்றாவது அவதாரம் வராக அவதாரம்.

வராக அவதாரம் எடுத்த நாள்தான் சித்திரை மாதத்தில் வராக ஜெயந் தியாகக் கொண்டாடப்படுகிறது. வராக ஜெயந்தி இரண்டு விதமாகக் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் வளர்பிறை திருதியை திதியிலும் இந்த ஜெயந்தி சில இடங்களில் கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம் தேய்பிறை பஞ்சமி திதியில் வராக ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வராகரின் பெருமையை ஆழ்வார்கள் மிக அதிகமான பாசுரங்களில் பாடியிருக்கின்றார்கள். மிக எளிதாக வராக ஜெயந்தியைக் கொண்டாடலாம்.

அதிகாலையில் எழுந்து கங்கையையும் காவேரியையும் நினைத்து புனித நீராட வேண்டும். வராகப்பெருமான் படம் இருந்தால், படத்தை அலங்கரித்து, பூஜை அறையில் வைக்கலாம் அல்லது ஒரு கலசத்தில் வராகப் பெருமானை ஆவாகனம் செய்து வணங்கலாம். அன்று விரதம் இருந்து சிறப்பான நிவேதனங்களுடன் வராக்ப பெருமானுக்குப் பூஜை செய்து பூஜை முடிந்தவுடன் நம்மால் இயன்ற அளவு தானத்தை மற்றவர்களுக்கு தந்து பூஜையை நிறைவு செய்துகொள்ளலாம்.பூமி யோகம் வேண்டும் என்று நினைப்பவர்களும், வீடு கட்டுதல் முதலி யவற்றில் தடைகள் உள்ளவர்களும் அன்றைய தினம் வராகப் பெருமான் கோயில் கொண்டுள்ள திருத்தலங்கள் ஏதாவது ஒன்றுக்குச் சென்று பெருமானை தரிசித்து வருவது நன்மையைத் தரும். விரும்பியதை நிறைவேற்றித் தரும் வராக ஜெயந்தி இன்று.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருத்தேர்
29.4.2024-திங்கள்

வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும்
வேழமும் பாகனும் வீழச்
செற்றவன் தன்னை புரம் எரி செய்த
சிவன் உறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு
பார்த்தன்-தன் தேர்முன் நின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானை
திருவல்லிக்கேணிக் கண்டேனே

என்று திருமங்கை ஆழ்வார் பாசுரமிட்ட திருத்தலம் திருவல்லிக்கேணி. எல்லா திவ்யதேசங்களிலும் திருத்தேர் உற்சவம் நடைபெறும். பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாள் தேர் உற்சவம் நடைபெறும் வழக்கம் உண்டு ஆனால் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நடக்கும் தேர் உற்சவத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. காரணம், இந்தப் பெருமாளே அர்ஜுனனின் தேரை ஓட்டிய பார்த்தசாரதி தானே. ஆகையினால் மகாபாரதத்தில் அர்ஜுனனுக்குத் தேரோட்டிய பெருமாள், தான் தேர் ஏறி வந்து நமக்குக் காட்சி அருள் தருவதற்காக வீதிவலம் வருவது எத்தனைச் சிறப்பு. அதை உணர்த்துகின்ற பார்த்த சாரதி பெருமாளின் தேர் உற்சவம் இன்று.நம்முடைய உடலே இதில் பஞ்ச இந்திரியங்கள் ஐந்து குதிரைகளாக நம்மை செலுத்துகின்றன. கர்மவினையின் காரணமாக இந்திரியங்களின் கட்டுப்பாட்டில் நாம் செலுத்தப்படுகின்றோம். ஆனால் பகவானை சரணடைந்தால் நம்முடைய உடலாகிய தேரை பரமாத்மாவான அவன் உள்ளே இருந்து பார்த்தசாரதியாக ஓட்டி நம்முடைய ஆத்மாவை கரை சேர்ப்பான். எனவே தேர் உற்சவத்தில் கலந்துகொண்டு பகவானின் திருத்தேரை இழுப்பதும், திருத்தேர் மீது அமர்ந்துள்ள பகவானை தரிசிப்பதும் பேறுகளில் ஒன்று.

சிவகாசி ஸ்ரீபத்திரகாளி
அம்மன் உற்சவ ஆரம்பம்
30.4.2024 – செவ்வாய்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மிகச்சிறந்த தொழில் நகரம். சிவகாசியில் உள்ள பத்ரகாளியம்மன் மிகப் புகழ்பெற்ற ஆலயமாகும். இங்கே சித்திரை மாதம் மிகச் சிறப்பான பொங்கல் திருவிழா பெருந்திருவிழாவாக நடைபெறும். அந்த விழாவின் துவக்க நாள் இன்று. இன்று முதல் ஒவ்வொரு நாளும் பத்ரகாளியம்மன் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். ஒன்பதாம் திருவிழா அன்று இரவு அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் பவனி வரும் விழா மிகச் சிறப்பாக நடைபெறும். இது தவிர இந்த விழாவில் சிவகாசியைச் சுற்றி உள்ள பல கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரண்டு வந்து கலந்து கொள்வார்கள். அவர்கள் பறவை காவடி எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல் என்று அம்மனுக்கு விரதம் இருந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவார்கள் பின்னர் பொங்கல் வைக்கும் வழிபாடு நடைபெறும். பட்டாசுத் தொழிலில் பிரசித்தி பெற்ற சிவகாசியில் நடைபெறும் இந்த உற்சவத்தில் வாண வேடிக்கைகளுக்கும் வண்ண விளக்குகளுக்கும் பஞ்சம் இருக்காது.

நடராஜ அபிஷேகம்
1.5.2024-புதன்

சிவபெருமான் அபிஷேகப் பிரியர். பல ஆலயக் கருவறைகளில் சிவலிங்கத்தின் மீது எப்போதும் ஜலதாரை பொழியக் காணலாம். ஆனால், நடராஜ ரூபத்துக்கோ ஓர் ஆண்டில் ஆறுதினங்களே அபிஷேகங்கள். ஆறும் ஆறு அற்புத தினங்கள்.1. மாசி சதுர்த்தசி, 2. சித்திரை திருவோணம், 3. ஆனி உத்திரம், 4. ஆவணி சதுர்த்தசி, 5.புரட்டாசி சதுர்த்தசி, 6. மார்கழி திருவாதிரை இந்தத் தினங்களில் அபிஷேகம் கண்டு அந்த அண்ணாமலையானை வேண்டிக்கொள்ள அனைத்துத் துன்பங்களும் தீரும் என்பது ஐதீகம். இன்று சித்திரை திருவோணம்.

திருவோண விரதம்
1.5.2024-புதன்

இன்று பெருமாளுக்குரிய புதவாரம். திருவோண நட்சத்திரம். சந்திரன் தன்னுடைய சொந்த நட்சத்திரத்தில் இருக்க, புதன்கிழமையில் இந்த விரதம் வருவது சிறப்பு. இன்று ஒப்பிலியப்பன், திருப்பதி கோயில்களில் ச்ரவண வழிபாடு விசேஷமாக இருக்கும். திருவோண விரதம் இருப்பதன் மூலம் சகல ஐஸ்வர்யங்களையும் பெறலாம். காலை முதல் மாலை வரை உண்ணாமல் இருந்து, விஷ்ணு சகஸ்ரநாமம் முதலிய பெருமாள் தோத்திரங்களை ஓதி, மாலையில் பக்கத்தில் இருக்கக்கூடிய பெருமாள் கோயிலுக்கு நெய் தீபம் போட்டு, துளசி மாலை சாற்றி, வலம் வருவதன் மூலமாக சந்திரனுடைய சகல தோஷங்களையும் போக்கிக் கொள்ளலாம். வணிகம், உத்தியோகம், தொழில் முதலிய அனைத்தும் மிகவும் சிறப்பாக நடக்கும். மாணவர்கள் கலைகளிலும் கல்வியிலும் கெட்டிக்காரர்களாகத் திகழ்வார்கள். சகல மங்கலங்களும் கொடுக்கும் இந்த விரதம்.

ஸ்ரீரங்கம் கருடசேவை
1.5.2024-புதன்

வைணவர்களுக்கு கோயில் என்றால் அது திருவரங்கம்தான் அங்கே உள்ள ரங்கநாதர் பெருமாளுக்கு அனேகமாக வருடம் முழுவதும் ஏதேனும் ஒரு விழா நடந்து கொண்டிருக்கும் அதில் சித்திரை திருவிழா என்பது மிகச் சிறப்பானது. அதிலும், குறிப்பாக சித்திரைத்தேர் திருவிழா மிக அற்புதமாக நடைபெறும். அதற்கு விருப்பன் திருநாள் என்று ஒரு பெயரும் உண்டு. அதன் நான்காம்நாள் விழாவில் உற்சவர் நம்பெருமாள் காலை ரெட்டை பிரபை வாகனத்திலும் மாலையில் தங்க கருட வாகனத்திலும் எழுந்தருளி சித்திரை வீதிகளில் புறப்பாடு கண்டருள்வார். நாளை வியாழக்கிழமை விருப்பம் திருநாள் ஐந்தாம் நாள் திருநாள் நடைபெறும். காலை சேஷ வாகனத்திலும் மாலை அனுமந்த வாகனத்திலும் நம்பெருமாள் வீதிவலம் கண்டருள்வார்.

ஸ்ரீவைகுண்டம்
ஸ்ரீவைகுண்டபதி பவனி
3.5.2024 – வெள்ளி

தூத்துக்குடி மாவட்டம் புகழ்பெற்ற ஸ்ரீவைகுண்டம் திருத்தலம் உள்ளது இங்கே வீற்றிருந்த பெருமானாக பரமபதத்தில் இருப்பதைப் போலவே பெருமாள் காட்சி தருகிறார். நவதிருப்பதிகளில் ஒன்று. கள்ளப்பிரான் திருக்கோயில் என்று இந்த திருக்கோயிலைச் சொல்வார்கள் இங்கே சித்திரைத் திருவிழா பிரசித்தி பெற்றது. அதில் இன்று பெருமாள் வீதிஉலா.

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Cholasimhapuram ,Lakshmi Narasimha Vidyayatri Utsavam ,Sani Ranipetti District ,Walajapetti ,Solinger ,Perumal ,Yoganarasimha ,
× RELATED கார்த்திகையில் கண்திறக்கும் நரசிம்மர்