×

உத்தரவாதம் தந்து மருத்துவ மேற்படிப்பு முடித்த பின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மறுப்பது பாராட்டத்தக்கதல்ல: உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: மருத்துவ மேற்படிப்பில் சேரும் மாணவர்கள், படிப்பு முடிந்த பின்னர் இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதாக உத்தரவாதம் அளிக்க வேண்டும். இதன்படி, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர்களாக பணியாற்றும் பிரியங்கா, பரத்ஜி பாபு, அம்பிகா ஆகியோர், கொரோனா காலத்தில் தாங்கள் ஆற்றிய பணியையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தங்களை விடுவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் திப்பு சுல்தான் ஆஜராகி, கொரோனா காலம் அவசரகாலம்.

மருத்துவ மேற்படிப்பு படித்துக் கொண்டிருப்பவர்களும் கொரோனா காலத்தில் பணியாற்ற வேண்டும். இவர்களுக்கு சலுகை வழங்குவதாக அரசு தெரிவிக்கவில்லை என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், மேற்படிப்பில் சேரும் போது நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு உத்தரவாத பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளதால், பயிற்சி காலத்தை குறைக்க வேண்டும் என்று சலுகை கோர முடியாது. நியமன உத்தரவின்படி பயிற்சி காலத்தை முடிக்க வேண்டும். சிறப்பு நிபுணத்துவ படிப்புக்களை படிக்கும் மருத்துவர்களுக்கு அரசு பெருந்தொகையை செலவிடுகிறது. படிப்பை முடித்த பின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மறுப்பது, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை மக்களின் அடிப்படை உரிமையை பாதிக்கும் செயல். மருத்துவர்களின் இந்த அணுகுமுறை பாராட்டத்தக்கதல்ல என்று தெரிவித்து வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post உத்தரவாதம் தந்து மருத்துவ மேற்படிப்பு முடித்த பின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மறுப்பது பாராட்டத்தக்கதல்ல: உயர் நீதிமன்றம் கருத்து appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Priyanka ,Stanley Medical College ,Chengalpattu Medical College ,Chennai Medical College ,
× RELATED ராகுல்காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்;...