ஐதராபாத்: ஐபிஎல் தொடரில் ஐதராபாத்தில் நேற்றிரவு நடந்த 41வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 206 ரன் எடுத்தது. அதிகபட்சமாக விராட்கோஹ்லி 51 (43 பந்து), ரஜத் படிதார் 50 (20 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்), கேமரூன் கிரீன் நாட் அவுட்டாக 37 ரன் (20 பந்து) அடித்தனர். ஐதராபாத் பவுலிங்கில் ஜெய்தேவ் உனத்கட் 3 விக்கெட் எடுத்தார். பின்னர் களம் இறங்கிய ஐதராபாத் அணியில், டிராவிஸ் ஹெட் 1, அபிஷேக் சர்மா 31, மார்க்ரம் 7, நிதீஷ்குமார் 13, கிளாசென் 7, அதுல் சமத் 10, கம்மின்ஸ் 31 ரன்னில் வெளியேற ஷாபாஸ் அகமது நாட் அவுட்டாக 40 ரன் எடுத்தார். 20 ஓவரில் ஐதராபாத் 8 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களே எடுத்தது. இதனால் 35 ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி 2வது வெற்றியை பெற்றது. ரஜத் படிதார் ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பின் ஆர்சிபி கேப்டன் டூபிளசிஸ் கூறியதாவது: “கடந்த 2 போட்டியில் சிறந்த போராட்டத்தை வெளிப்படுத்தி நல்ல அறிகுறிகளை கண்டோம். ஐதராபாத்திற்கு எதிராக கடந்த முறை 270 ரன் சேசிங்கில் 260 ரன் எடுத்தோம். கேகேஆரிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம். ஆனால் தனியாக நீங்கள் நம்பிக்கையை பெற வெற்றி பெற வேண்டும். போலியாக அணியினருக்கு நம்பிக்கையை கொடுக்க முடியாது. இங்கு போட்டி மிக அதிகமாக இருக்கிறது.
இப்போது எங்கள் நிறைய வீரர்கள் ரன் அடிக்கிறார்கள். ஆரம்ப கட்டத்தில் கோஹ்லி மட்டுமே ரன் எடுத்து வந்தார். இன்று கிரீன் எடுத்த ரன் அவருக்கு பெரிய விஷயமாக இருக்கும். சின்னசாமி மைதானம் எங்களுக்கு பெரிய ஏமாற்றம் என்பதை அறிவோம். பந்துவீசுவதற்கு மிகவும் கடினமான இடம். அதற்கான செய்முறைகளை கண்டுபிடிக்க முயற்சி செய்தோம். ஆனாலும் அது கடினமானது” என்றார். ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில், பந்துவீச்சில் சரியாக செயல்படவில்லை. பேட்டிங்கில் விக்கெட்டுகளை கொத்தாக ஒரே நேரத்தில் இழந்துவிட்டோம். இனி நாங்கள் எல்லா போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என நினைக்கின்றேன். அதுதான் எங்களுக்கு கை கொடுக்கிறது. வெற்றி பெற்றால் வீரர்களுடன் நான் பேசுவேன். தோல்வியை தழுவினால் பயிற்சியாளர் வெட்டோரி தான் பேசுவார். டி20 கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அனைத்து போட்டிகளையும் தொடர்ந்து வெற்றி பெற முடியாது. இந்த தோல்வியால் அதிகம் கவலைப்பட தேவையில்லை. அதிரடியாக பேட்டிங் விளையாடுவது எங்களுடைய பலமாக இருக்கிறது. அதே சமயம் இது எல்லா போட்டியிலும் கை கொடுக்காது’’ என்றார்.
The post 2வது வெற்றியை ருசித்த ஆர்சிபி; தோல்வியால் அதிகம் கவலைப்பட தேவையில்லை: ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பேட்டி appeared first on Dinakaran.