×

நெல்லை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் காத்திருப்பு போராட்டம்

*அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு

நெல்லை : நெல்லை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களை போலி ஆவணம் மூலம் தனியார் நிறுவனத்துடன் இணைத்ததை கண்டித்தும், 140 தூய்மைப் பணியாளர்களுக்கு முறையாக வேலை மற்றும் ஊதியம் வழங்காததை கண்டித்தும் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.

நெல்லை மாநகராட்சியில் நெல்லை, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன. இந்த 4 மண்டலங்களில் மொத்தம் 573 தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக்குழுவின் கீழ் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினசரி ஊதியமாக ரூ.480 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சுய உதவிக் குழு தூய்மை பணியாளர்களை தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்ய அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தீர்வு காணப்பட்டது. இந்நிலையில் தச்சநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட 140 தூய்மைப் பணியாளர்களை, போலியான ஆவணம் மூலம் தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த தொழிலாளர்களாக மாற்றம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டும் முறையான தகவல் தெரிவிக்கவில்லை. இதனால் தச்சநல்லூர் மண்டலத்தில் தூய்மை பணியாளர்களுக்கு பணி ஒதுக்காமல், ஊதியம் வழங்கப்படாத நிலை தொடர்ந்தது. கடந்த 8 நாட்களாக ஊதியம் இன்றி குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலைக்கு தூய்மை பணியாளர்கள் தள்ளப்பட்டனர்.

இதனை கண்டித்தும், பணி வழங்கப்படாத நாட்களையும் சேர்த்து முறையாக சம்பளம் வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு தொடர்ந்து சுய உதவிக் குழுக்கள் மூலமே பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக உள்ளாட்சி ஊழியர் சங்க நெல்லை மாவட்ட தலைவர் மோகன் தலைமையில் ஆண்கள், பெண்கள் உள்பட தூய்மைப் பணியாளர்கள் சுமார் 100 பேர், நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று காலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போது தச்சநல்லூர் மண்டலத்தில் 140 தூய்மைப் பணியாளர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்து வழங்கப்படும். சுய உதவிக்குழு தூய்மைப் பணியாளர்களாக தொடர்ந்து பணி செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 140 தூய்மைப் பணியாளர்களும் இன்று முதல் பணிக்கு திரும்பலாம். மாநகராட்சி கமிஷனர் வெளியூர் சென்றுள்ளார். அவர் வந்தவுடன் அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தைத் தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதாக ஊரக உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் மோகன் தெரிவித்தார்.

The post நெல்லை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Nellai Corporation ,Nellie ,Nellie Corporation ,
× RELATED 7, 8ம்தேதி நடைபெற இருந்த உதவி...