*கெடு முடிந்ததால் அதிகாரிகள் அதிரடி
தியாகராஜநகர் : நெல்லையில் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் அரசு குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பிறகும் செயல்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு அதிகாரிகள் அதிரடியாக ‘சீல்’ வைத்தனர். இதையடுத்து கல்வி அலுவலகம் வேறு தனியார் வாடகை கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.
பள்ளி வளாகங்களில் உள்ள கட்டிடங்களில் கல்வி அலுவலகங்கள் இயங்கக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது. மாணவர்களுக்கு வகுப்பறைகள் தேவை என்பதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நெல்லையில் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) அலுவலகம் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானம் வளாகம் பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி வளாக கட்டிடத்தில் இயங்கி வந்தது. இங்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் 6 அலுவலர்கள் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் அரசு உத்தரவுப்படி இந்த வளாகத்தில் இயங்கும் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் நோட்டீஸ் அனுப்பினார். இதனால் வேறு வாடகை கட்டிடம் பார்ப்பதற்காக கல்வி அலுவலர்கள் குறிப்பிட்ட கால அவகாசம் கேட்டனர். அதன்படி 10 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் அதன்பிறகும் கல்வி அலுவலகம் தொடர்ந்து அங்கேயே செயல்பட்டதாக தெரியவந்தது.
இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் உத்தரவுபடி, பாளை. மண்டல உதவி ஆணையர் சுகி பிரேமலா மற்றும் அதிகாரிகள் அந்த கட்டிடத்திற்கு சென்று கல்வி அலுவலகத்தை உடனே காலி செய்ய வேண்டும் என மீண்டும் நோட்டீஸ் வழங்கி உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து அங்கு பணியில் இருந்த அதிகாரி மற்றும் அலுவலர்கள் வெளியேற்றப்பட்டு அந்தக் கட்டிடம் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. அங்கிருந்து பொருட்களை எடுத்துச் செல்ல 2 நாள் அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த அதிரடி நடவடிக்கையால் கல்வி அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.தொடர்ந்து அவர்கள் வேறு கட்டிடத்திற்கு மாற்றும் பணியை விரைவுப்படுத்தினர். இதன்படி பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் புதிய தனியார் வாடகை கட்டிடத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்தனர். இதன்படி தளவாடப் பொருட்கள் மாற்றும் பணி தற்போது நடந்து வருகிறது. வருகிற திங்கட்கிழமைக்கு முதல் புதிய அலுவலகத்தில் மாவட்ட கல்வி அலுவலகம் முழுமையாக இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்வி அலுவலகத்தை மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்த சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
The post நெல்லையில் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் இயங்கிய மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு ‘சீல்’ வைப்பு appeared first on Dinakaran.