×

சேலத்தில் வெயிலின் கொடுமையை விளக்க தியாகிகள் நினைவு ஸ்தூபியில் ஆம்லெட் போட்ட சமூக ஆர்வலர்

*போலீசார் அழைத்து சென்றதால் பரபரப்பு

சேலம் : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென்னிந்திய பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக, சேலத்தில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. வெப்பக்காற்றில் சிக்கி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை, பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சமூக ஆர்வலரான கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் நிர்வாகி பிரபாகரன், நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே, ரோட்டில் முட்டை பொரிக்கும் நிகழ்வை நடத்திக் காட்டினார். தியாகிகள் நினைவு ஸ்தூபியில் உள்ள கல்லில், அவர் முட்டையை உடைத்து ஊற்றினார். வெயிலின் கொடுமையில் அது ஆப்பாயிலாக மாறிக்கொண்டிருந்த நிலையில், இதுகுறித்த தகவல் கிடைத்ததும் டவுன் இன்ஸ்பெக்டர் மோகன்பாபு கண்ணா அங்கு விரைந்து வந்தார்.

தியாகிகள் நினைவு ஸ்தூபியில் ஆம்லெட் போடலாமா? என்று கேள்வி எழுப்பியதுடன், ஆம்லெட் போட்ட பிரபாகரனையும், அவரது நண்பரையும் ஆட்டோவில் ஏற்றி டவுன் போலீஸ் ஸ்டேசனுக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றார். அப்போது, சமூக ஆர்வலர் பிரபாகரன், பொதுமக்கள் வெளியே வந்து வெயிலினால் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்ற நோக்கத்தில், ரோட்டில் ஆம்லெட் போட முடிவு செய்தேன்.

தெரியாமல் தியாகிகள் நினைவு தூபியில் ஆம்லெட் போட்டு விட்டேன். இனி இது போன்ற செயலில் ஈடுபட மாட்டேன்’ என்றார். அவருக்கு அறிவுரை கூறிய போலீசார், பின்னர் அனுப்பி வைத்தனர். வெயிலுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஆம்லெட் போட வந்த சமூக ஆர்வலர், போலீசில் சிக்கிக்கொண்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சேலத்தில் வெயிலின் கொடுமையை விளக்க தியாகிகள் நினைவு ஸ்தூபியில் ஆம்லெட் போட்ட சமூக ஆர்வலர் appeared first on Dinakaran.

Tags : Martyrs Memorial Stupa ,Salem ,of ,India ,
× RELATED ரயிலில் அடிபட்டு இறந்த வாலிபர்