ஊட்டி, ஏப். 26: சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அண்டை மாநிலங்களான கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தே அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் இவ்விரு மாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
குறிப்பாக, கேரள மாநிலத்தில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
இந்நிலையில், கோடை சீசன் துவங்கிய நிலையில், கடந்த 20 நாட்களாக இவ்விரு மாநிலங்களில் இருந்து ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கேரள மாநிலத்தில் ரமலான் பண்டிகை முடிந்த பின், அங்கிருந்து வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. இந்நிலையில், இன்று கேரள மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. அதேபோல், கர்நாடக மாநிலத்தில் வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.
இதனால், இங்கிருந்து வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நேற்று சற்று குறைந்து காணப்பட்டது. இன்று வாக்குப்பதிவு என்பதால், பெரும்பாலான மக்கள் ஓட்டு போடும் நிலையில், இவ்விரு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இன்று ஊட்டிக்கு வர வாய்ப்பில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்தே காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை முதல் இவ்விரு மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கம் போல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டிலும், இன்று முதல் பள்ளிகளுக்கு தேர்வு முடியும் நிலையில், நாளை முதல் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்பு appeared first on Dinakaran.