×
Saravana Stores

கிண்டி பாம்பு பண்ணையில் 3டி தொழில்நுட்ப வசதி

சென்னை, ஏப்.26: கிண்டியில் உள்ள பழமைவாய்ந்த பாம்பு பண்ணை, இந்திய அளவில் புகழ்பெற்றது. 1972ம் ஆண்டில் இந்தியாவில் முதல் முறையாக துவக்கப்பட்ட இந்த பாம்பு பண்ணை, சென்னை மாநகருக்குள் இருப்பதால் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இங்கு வந்து பாம்புகளை பார்வையிட்டு செல்கின்றனர். இந்த பாம்பு பண்ணை ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மேலும் இங்கு, பாம்புகளை இனப்பெருக்கம் செய்தல், பாம்புகளின் வகைகள் மற்றும் அவற்றின் குணாதிசயங்கள் குறித்து மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தல், பாம்புகள் பற்றி ஆராய்ச்சி செய்பவர்களுக்கு உதவுதல் எனப் பலவிதமான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் பாம்புகள் பற்றி அறிந்து கொள்ளும் விதமாக புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு, பல்வேறு வகையான பாம்புகள், முதலைகள், ஆமைகள், ஓணான் வகைகள், பச்சோந்தி, உடும்பு உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் இந்த பாம்பு பண்ணையில் வன உயிரினங்களை அருகில் இருந்து தொட்டு பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘3டி’ தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், 3டி விர்ச்சுவல் ரியாலிட்டி ஷோ, டைனோசர் உலகம், நீருக்கடியில் உலகம், வனப்பகுதி உலகம் போன்ற காட்சிகள் உள்ளது. நாம் விரும்பும் காட்சிகளை தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் 3டி ஷோ, வன உயிரினங்களை அருகில் நின்று பார்ப்பது போன்றும், அவை நம்மை சீண்டுவது போன்று காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் இந்த 3டி தொழில்நுட்பம் அனைவரின் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கிண்டி பாம்பு பண்ணையில் 3டி தொழில்நுட்ப வசதி appeared first on Dinakaran.

Tags : Kindi Snake Farm ,CHENNAI ,Guindy ,India ,Dinakaran ,
× RELATED தீபாவளி பண்டிகையின்போது ஆம்னி...