×

தாம்பரம் அருகே வாங்கிய கடனுக்கு கூடுதல் வட்டி கேட்டு எலக்ட்ரிஷியனை மிரட்டும் காவலர்: ஆடியோ வைரல்

பெரும்புதூர், ஏப்.26: தாம்பரம் அருகே வாங்கிய கடனுக்கு கூடுதல் வட்டி கேட்டு எலக்ட்ரிஷியனை காவலர் மிரட்டிய ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தாம்பரம் அருகே, படப்பை அடுத்த காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (30). இவர் படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரி பகுதியில் வாகனங்களுக்கு எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, மணிமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் கணேஷ் சிங் என்பவரிடம், முதலில் ₹50 ஆயிரம் வட்டிக்கு வாங்கியுள்ளார். அதற்கு ஒவ்வொரு மாதமும் ₹2,500 வட்டியை கணேஷ் சிங்கிடம் கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், கணேஷ் சிங் மற்றும் எலக்ட்ரிஷியன் பாண்டியன் ஆகியோரிடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக பிரச்னை ஏற்பட்ட நிலையில், இருவரும் செல்போனில் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த உரையாடல் குறித்த விவரம்: காவலர் கணேஷ் சிங், பாண்டியனிடம் ‘இன்னும் நீ எனக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும், என்கிறார். அதற்கு பாண்டியன், ‘நான் இன்னும் 50 ஆயிரம் ரூபாய்தான் தர வேண்டும். என்னை தொடர்ந்து தொந்தரவு செய்தால் நான் உங்கள் பெயரை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொள்வேன்’ என்று பாண்டியன் கூறியுள்ளார். அதற்கு, கணேஷ் சிங், என்னை மிரட்டுகிறாயா? வேண்டாம் தம்பி வேற மாதிரி ஆகிவிடும், என பாண்டியனை மிரட்டும் ஆடியோ பதிவாகி உள்ளது. இந்த ஆடியோ சமூக வலைதளத்தில வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், சாலமங்கலம் பகுதியில் கள்ள சந்தையில் மதுபாட்டில் விற்பனை செய்தவரை தாக்கி பணம் பறித்த சம்பவத்தில் கணேஷ் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தாம்பரம் அருகே வாங்கிய கடனுக்கு கூடுதல் வட்டி கேட்டு எலக்ட்ரிஷியனை மிரட்டும் காவலர்: ஆடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Pandian ,Gandhi Nagar ,Padappa ,Dinakaran ,
× RELATED சென்னையில் இன்டர்லாக் சிக்னல் பணிகள்...