புதுடெல்லி: மக்களவை தேர்தலில் 2ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்க உள்ள நிலையில், ராகுல் காந்தி டிவிட்டரில் வெளியிட்ட வீடியோ பதிவு: இந்த தேர்தல் ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் காப்பாற்றுவதற்கான தேர்தல். ஒருபுறம் பாஜவும், ஆர்எஸ்எஸ்சும் ஜனநாயகத்தை அழித்து அரசியல் சாசனத்தை மாற்ற முயல்கின்றன. மறுபுறம், ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் காப்பாற்ற காங்கிரசும், இந்தியா கூட்டணியும் இருக்கின்றன. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 4,000 கிமீக்கு மேல் நடந்தோம், மணிப்பூர் முதல் மகாராஷ்டிரா வரை பயணித்தோம், உங்களுடன் பேசி, உங்கள் பிரச்னைகளை கேட்டறிந்து புரட்சிகரமான தேர்தல் அறிக்கையை தயாரித்தோம். இது உங்கள் தேர்தல் அறிக்கை. காங்கிரஸ் தயாரித்தாலும் இது உங்கள் குரல்.
நாங்கள் 5 உத்தரவாதங்களை அளித்துள்ளோம். மோடி 25 பேரை கோடீஸ்வரர் ஆக்கினார். நாங்கள் கோடிக்கணக்கான பெண்கள், இளைஞர்களை லட்சாதிபதி ஆக்கப் போகிறோம். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்குவோம். அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்வோம். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.400 ஊதியம் வழங்குவோம் என உறுதி அளித்துள்ளோம். இது நாட்டை மாற்றுவதற்கான அறிக்கை. இந்த தேர்தலில் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க, இந்தியர்களுக்கான அரசை அமைக்க, நண்பர்கள் காலத்தில் இருந்து நாடு வெளியே வர, காங்கிரசின் கை சின்னத்திற்கு வாக்களித்து உங்கள் ஜனநாயக கடமையை செய்யுங்கள். இவ்வாறு ராகுல் கூறி உள்ளார்.
The post ஜனநாயகம், அரசியலமைப்பை காப்பதற்கான தேர்தல் இது: வாக்களிக்க ராகுல் அழைப்பு appeared first on Dinakaran.