திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. இந்தநிலையில் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் கல்பெட்டா, பத்தேரி, மானந்தவாடி ஆகிய பகுதிகளில் உள்ள சில மொத்த பலசரக்கு கடைகளில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக உணவுப் பொருட்களை பைகளில் போட்டு வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் விரைந்து சென்று சோதனை நடத்தினர். இதில் 3 சரக்கு வாகனங்களில் உணவுப் பொருட்கள் அடங்கிய பைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஒவ்வொரு பையிலும் 1 கிலோ சர்க்கரை, பிஸ்கட், ரஸ்க் பாக்கெட்டுகள், 250 கிராம் டீ தூள், அரை லிட்டர் தேங்காய் எண்ணெய், அரை கிலோ சலவைப் பொடி, ஒரு குளியல் சோப் ஆகியவை இருந்தன. இது தவிர வெற்றிலை, சுண்ணாம்பு, பாக்கு, புகையிலை அடங்கிய பைகளும் இருந்தன. உடனே லாரிகளை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பொருட்களை வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பாஜ தான் கொண்டு வந்துள்ளது என்று கம்யூனிஸ்ட், காங்கிரஸ் புகார் கூறியுள்ளன. ஆனால் அதை பாஜ மறுத்துள்ளது.
The post வயநாடு தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுக்க 3 சரக்கு லாரியில் கொண்டு வந்த உணவு பொருட்கள் பறிமுதல்: பாஜ மீது புகார் appeared first on Dinakaran.