×
Saravana Stores

கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை: கம்போடியா நாட்டிலிருந்து மலேசியா வழியாக சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை ஏர் ஏசியா பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர்.

அப்போது அந்த விமானத்தில் கம்போடியா நாட்டிலிருந்து மலேசியா வழியாக வந்த பயணி மீது, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரித்ததில், முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் அவருடைய உடமைகளை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் அவருடைய பைக்குள் மறைத்து வைத்திருந்த கொக்கைன் போதைப் பொருள் பார்சல் இருந்தது தெரிய வந்தது.

அதை அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது, அதனுள் 3.5 கிலோ கொக்கைன் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.35 கோடி. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அந்த பயணியை தனி அறையில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். அவரது பெயர், எந்த நாட்டைச் சேர்ந்தவர் போன்ற விவரங்களை அதிகாரிகள் வெளியிட மறுத்து விட்டனர்.

ஆனால் சர்வதேச போதை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் என்று தெரிய வருகிறது. நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்தில் ரூ.28 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், நேற்று மேலும் ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Cambodia ,Chennai ,Malaysia ,Central Revenue Intelligence ,Kuala Lumpur ,Chennai International Airport ,Dinakaran ,
× RELATED வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக...