×

13 மாநிலங்களில் மக்களவை 2ம் கட்ட தேர்தல் 88 தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு

* அனல்காற்று வீசுவதால் பூத்களில் கூடுதல் வசதி, ராகுல், ஓம்பிர்லா, சசிதரூர், குமாரசாமி, ஹேமமாலினி போட்டி

புதுடெல்லி: மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று நடக்கிறது. இதில் ராகுல், ஓம்பிர்லா, சசிதரூர், குமாரசாமி, ஹேமமாலினி ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். 18வது மக்களவை தேர்தல் ஏப்.19ம் தேதி தொடங்கி விட்டது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதி உள்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவில் 65.5 சதவீத வாக்குகள் பதிவானது.

2ம் கட்ட தேர்தல் கேரளா, கர்நாடகா உள்பட நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் ஏப்.26ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் மத்தியபிரதேச மாநிலம் பெதுல் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் வேட்பாளர் அசோக் பாலவி இறந்ததால் அந்த தொகுதியில் தேர்தல் மே 7ம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீதம் உள்ள 88 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறும் இந்த 88 தொகுதிகளில் மொத்தம் 1202 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 1098 ஆண்கள், 102 பேர் பெண் வேட்பாளர்கள்.

புறநகர் மணிப்பூர் தொகுதியில் மட்டும் 4 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா போட்டியிடும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதி, ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் போட்டியிடும் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் போட்டியிடும் கேரள மாநிலம் ஆலப்புழா, சசிதரூர், ஒன்றிய அமைச்சர் ராஜீவ்சந்திரசேகர் ஆகியோர் போட்டியிடும் திருவனந்தபுரம்,

நடிகர் அருண் கோவில் போட்டியிடும் உத்தரபிரதேச மாநிலம் மீரட் தொகுதி, கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் சகோதரர் டிகே சுரேஷ் போட்டியிடும் பெங்களூர் புறநகர், கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி போட்டியிடும் மண்டியா, நடிகை ஹேமமாலினி போட்டியிடும் உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதிகள் முக்கிய தொகுதிகளாக உள்ளன.

இன்று தேர்தல் நடக்கும் 88 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.  மேலும் அனைத்து பூத்களிலும் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வருவதால் ஓட்டுப்பதிவு குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே வெயிலை சமாளிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பூத்களில் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

* இன்றைய வானிலை என்ன?
முதற்கட்ட தேர்தலை கடும் வெப்ப அலை பாதித்தது. இதனால் பல மாநிலங்களில் ஓட்டுப்பதிவு குறைந்தது. அதே போல் இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் மாநிலங்களிலும் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு மேற்கு வங்கம், ஒடிசா, பீகார், ஜார்கண்ட், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதில் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவிற்கு சிவப்பு எச்சரிக்கையும், பீகார் மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இன்று மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் சட்டீஸ்கரின் சில பகுதிகளில் அதிவேக காற்று, லேசான மழை, இடியுடன் கூடிய மழை பெய்து வெப்பமான வானிலையிலிருந்து தற்காலிக நிவாரணம் அளிக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய வெப்ப அலை இந்த மாதத்தில் இரண்டாவது முறையாகும்.

* முக்கிய மோதல்கள் மக்களவை தேர்தல் 2ம் கட்டத்தில் முக்கிய மோதலில் ஈடுபட்டுள்ள தலைவர்களும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளும் பின்வருமாறு

1 வயநாடு(கேரளா): ராகுல்காந்தி(காங்.), ஆனி ராஜா( இந்திய கம்யூ.), கே.சுரேந்திரன்(பா.ஜ)

2 திருவனந்தபுரம் (கேரளா): சசிதரூர்(காங்.), ராஜீவ்சந்திரசேகர்(பா.ஜ), பன்னியன் ரவீந்திரன்(இ.கம்யூ.)

3 மதுரா(உபி): நடிகை ஹேமமாலினி(பா.ஜ), முகேஷ் தங்கர்(காங்.)

4 கோட்டா (ராஜஸ்தான்): மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா(பா.ஜ), பிரகலாத் குஞ்சால்(காங்.)

5 ஜோத்பூர் (ராஜஸ்தான்): கஜேந்திரசிங் ஷெகாவத்(பா.ஜ), கரன்சிங் உச்சியார்டா(காங்.)

6 பெங்களூர் தெற்கு: தேஜஸ்விசூர்யா(பா.ஜ), சவுமியா ரெட்டி(காங்.)

7ராஜ்நந்த்கான் (சட்டீஸ்கர்): பூபேஷ் பாகெல்(காங்.), சந்தோஷ்பாண்டே(பா.ஜ)

8மீரட்(உபி): நடிகர் அருண்கோவில்(பா.ஜ), சுனிதா வர்மா(சமாஜ்வாடி), தேவ்ரத்குமார் தியாகி (பகுஜன்சமாஜ்)

* இன்று நடக்கும் இரண்டாம்கட்ட தேர்தலில் 15.88 கோடி பேர் வாக்களிக்கிறார்கள். இதற்காக நாடு முழுவதும் 1.67 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

* 34.8 லட்சம் பேர் முதல் வாக்காளர்கள். 20 முதல் 29 வயது வரை 3.28 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

* 3 ஹெலிகாப்டர்கள், 4 சிறப்பு ரயில்கள், 80 ஆயிரம் வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

The post 13 மாநிலங்களில் மக்களவை 2ம் கட்ட தேர்தல் 88 தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha elections ,Rahul ,Ombirla ,Sasitharur ,Kumaraswamy ,Hemamalini ,New Delhi ,Kerala ,Karnataka ,Lok Sabha ,phase election ,Dinakaran ,
× RELATED பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதால்...