×

தஞ்சையில் பயங்கரம்; 1,000 ரூபாய்க்காக சிக்கன் கிரில் மாஸ்டர் அடித்து கொலை: 2 பேர் கைது

தஞ்சை: தஞ்சையில் 1,000 ரூபாய்க்காக சிக்கன் கிரில் மாஸ்டரை அடித்து கொன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சை அடுத்த நாஞ்சிக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(40). மருத்துவக்கல்லூரி சாலை ரகுமான் நகரில் உள்ள ஒரு சிக்கன் கார்னர் கடையில் சிக்கன் கிரில் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி கமலாதேவி(35). கடந்த 16ம் தேதி வேலைக்கு சென்ற பிரகாஷ் இரவாகியும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடியும் கிடைக்கவில்லை. மறுநாள் தஞ்சை சரபோஜி கல்லூரி மைதானம் அருகே பிரகாஷ் காயங்களுடன் சடலமாக கிடந்தார்.

இதுகுறித்து கமலாதேவி அளித்த புகாரின்பேரில் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் குடிபோதையில் இருந்த பிரகாசை, அவரது மோட்டார் சைக்கிளிலேயே ஒருவர் அழைத்து செல்வதும், பின் தொடர்ந்து மற்றொருவர் மோட்டார் சைக்கிளில் செல்வதும் தெரியவந்தது.

விசாரணையில் பிரகாஷை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றது தஞ்சை ரெட்டிப்பாளையம் மேட்டுத்தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் ஆட்டோ டிரைவர் தமிழ்நீதி(29), தஞ்சை மங்களபுரம் அணில் நகர் ரமணி மகன் பிரவீன்(28) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் குடிபோதையில் இருந்த பிரகாசை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த செல்போன், ரூ. 1000 பணத்தை பறித்து கொண்டதுடன், மோட்டார் சைக்கிளையும் எடுத்து சென்றதும், இவர்கள் தாக்கியதில் பிரகாஷ் இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் நேற்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தஞ்சையில் பயங்கரம்; 1,000 ரூபாய்க்காக சிக்கன் கிரில் மாஸ்டர் அடித்து கொலை: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tanjore ,Thanjavur ,Prakash ,Nanchikot North Street ,Medical College Road Raghuman Nagar… ,Dinakaran ,
× RELATED தஞ்சையில் அறுவடை செய்த வயல்களில் வாத்து மேய்க்கும் பணி மும்மரம்